கன்னியாகுமரி கடற்கரையில் பல வண்ண மணல் இருப்பதற்கும் குமரி அம்மன் கோபத்திற்கும் உள்ள தொடர்பு இதுதாங்க..!

பொதுவாக கடற்கரை மணல் ஒரே மாதிரியான நிறத்துடன் இருக்கும்.


ஆனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மட்டும் மணல் மஞ்சளாக, கருமையாக, சிவப்பாக, மஞ்சள் கருமை கலந்த நிறமாக, மஞ்சள் சிவப்பு கலந்த நிறமாக, வெளிர் சிவப்பு நிறமாக என பல நிறத்தில் இருக்கிறது. இங்கு கிடைக்கும் சிப்பிகள் கூட பல நிறங்களில், பல வடிவமைப்புகளுடன் காணப்படுகின்றன.

முக்கடல் சங்கமிக்கும் இடம் என்பதால் மணலும், சிப்பிகளும் இப்படி பல நிறத்தில் இருக்கின்றன என விளக்குகிறது அறிவியல். ஆனால் இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது

குமரி அம்மன் திருமணத்திற்கு வராமலேயே நின்றுவிட்டார் சிவபெருமான். அந்த விஷயம் தெரிந்தவுடன் கோபமுற்ற குமரி அம்மன், அவர் அனுப்பி வைத்திருந்த திருமண சீர் மற்றும் உணவை தூக்கி வீசினாளாம். தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் சிப்பிகளாகவும், சாப்பாடு, பாயாசம், பொரியல், கூட்டு உள்ளிட்ட உணவு வகைகள் மணலாகவும் மாறிவிட்டனவாம். தூக்கி வீசிய சீர்வரிசை பொருட்கள் பல வடிவத்திலிருந்ததால் சிப்பிகள் பல வடிவமைப்புகளுடன் உள்ளனவாம். உணவுகள் பல நிறத்தில் இருந்ததால் மணலும் பல நிறத்தில் இருக்கிறதாம்!

இந்தக் கோயிலில் நான்கு கால் மண்டபம் ஒன்று உள்ளது. சிவன் பார்வதி திருமண விழாவிற்காக இசைக்க எடுத்துவரப்பட்ட இசைக் கருவிகளே இந்த மண்டபத்தில் தூண்களாக நிற்பதாக நம்பப்படுகிறது. அந்த நான்கு தூண்களைத் தட்டினால் ஒவ்வொன்றும் ஜலதரங்கம், மிருதங்கம் மற்றும் புல்லாங்குழல் ஓசை எழுப்புமாம்.

தமிழகத்திலும் கேரளத்திலிருந்தும் இந்தக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நிகராக காசி ராமேஸ்வரம் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பலரும் இந்தப் பூமிக்கு வருகை தருகிறார்கள். அவர்கள் அருள்மிகு குமரி அம்மனை வழிபட்டு, புடவை சாற்றி, கடற்கரைக்குச் சென்று பலநிற மணலையும், சிப்பிகளையும் எடுத்துச் சென்று தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.