எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, 300 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக, சிவோட்டர் கூறியுள்ளது.
மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? அசர வைக்கும் கருத்துக் கணிப்பு உள்ளே!
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணியை நிறைவு செய்து, பிரசார பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதன்படி, பாஜக தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், களத்தில் மோத உள்ளன.
இந்த தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று, சிவோட்டர் நிறுவனம், முன்கூட்டியே கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான கூட்டணி கட்சிகளை ஏற்படுத்தி, இணக்கமாக தேர்தலை எதிர்கொள்ளும் எனில், தேசிய அளவில் 42 சதவீத ஓட்டுகளை பெற வாய்ப்புள்ளதாக,.தெரியவந்துள்ளது.
அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு, 30.4 சதவீத அளவே ஓட்டுகள் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில், கூட்டணி கட்சிகளின் பங்களிப்பும் முக்கியமானதாக உள்ளது. இதேபோல, தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேசியவாதம் பற்றியே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள மந்த நிலை பற்றி கவனிப்பதில்லை எனவும் சிவோட்டர் கூறியுள்ளது.
வரும்தேர்தலில், இந்த பாதிப்புகளும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாஜக , சரியான வகையில் கூட்டணி கட்சிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், காங்கிரஸ், கூட்டணி அமைப்பதில் கோட்டை விட்டுவிட்டதாகவும் சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறிப்பிடுகின்றன. எனவே கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.