கொரோனா விவகாரத்தில் நான் கடுமையாக உழைத்ததால் முதலமைச்சர் என்னை கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள் என்று கூறியிருக்கிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகளிடம் கூறி வருகிறார்.
ரொம்ப உழைச்சிட்டேன்..! அதான் ரெஸ்ட்ல இருக்கேன்..! தழுதழுத்த விஜயபாஸ்கர்..! இவருக்கு ஏன் இந்த நிலை?
தமிழகத்தில் கொரோனா விவகாரத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் மீடியாக்களில் பட்டைய கிளப்பி வந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவார். இவர் பிரஸ் மீட், மருத்துவமனை விசிட், ஆலோசனை மீட்டிங் போன்றவற்றின் மூலம் மிக பிஸியாக வலம் வந்து கொண்டிருந்தார். தினமும் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் விவரம் போன்றவற்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தினசரி பகிர்ந்து வந்தார்.
ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்களே கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தற்போது பிரஸ் மீட்டில் தினமும் பேசி வருகிறார். கொரோனா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசின் கொள்கைகளை விட தன்னையே அதிகம் முன்னிறுத்தி கொண்டதாலும், கமிஷன் விவகாரம் ஆகியவற்றால் அவரை ஓரங்கட்டி விட்டார்கள் என்று சிலர் கூறி வருகிறார்கள். தற்போது விஜயபாஸ்கர் தனது சொந்த தொகுதியான புதுக்கோட்டைக்கு சென்று தனது தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளையும் , கட்சி நிர்வாகிகளை சந்திப்பது போன்ற வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை மற்றும் உழவர் சந்தை போன்ற இடங்களில் நடக்கும் பிரச்சனைகளை சரிசெய்ய தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தனது சொந்த தொகுதியில் தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறார் விஜயபாஸ்கர். அப்போது அவரிடத்தில் பேசிய கட்சி நிர்வாகிகளிடம் கொரோனா விவகாரத்தில் நான் கடுமையாக வேலை செய்ததால் , முதலமைச்சர் என்னை ரெஸ்ட் எடுங்கள் என்று கூறியுள்ளார். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆகையால் நீங்கள் உங்கள் சொந்த தொகுதிக்கு சென்று உங்கள் தொகுதி மக்களின் பிரச்சனைகளை கவனித்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியதால் தான் இங்கே வந்துள்ளேன் எனவும் விஜயபாஸ்கர் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.