தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முதல் பெண் தலைவர்! யார் தெரியுமா?

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ரூபா குருநாத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் ஒருமனதாக ரூபா குருநாத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக செயற்குழு தேர்வு செய்தது. ரூபா குருநாத் ஏற்கனவே பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசனின் மகள் ஆவார்.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மகள் தான் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவி ஆகியுள்ளார்.

பெண் ஒருவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக தேர்வாகியிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் இந்தியா முழுவதும்கிரிக்கெட் சங்கங்களில் ஆண்களின் ஆதிக்கமே இருக்கும். முதல் முறையாக பெண் ஒருவர் உயர் பொறுப்பிற்கு வந்துள்ளார்.

ரூபாவின் கணவர் பெயர் குருநாத் மெய்யப்பன். இவர் ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியாக இருந்தார். அப்போது சூதாட்ட புகார் எழுந்ததை தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் தலையிட குருநாத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இப்படி சர்ச்சைக்குரிய நபர் ஒருவரின் மனைவியைத்தான் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக்கியுள்ளனர்.