தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.!

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், புதிய சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார். .


அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை மாவட்டம், அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் இரயில் நிலையம் அருகில் உள்ள இரயில்வே கடவு எண் 4-க்கு மாற்றாக, 21 கோடி 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சுரங்கப் பாதையை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

மேலும், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், இராமநாதபுரம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 59 கோடி 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 பாலங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.  

இவை தவிர, இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், சிறுகரும்பூர் - வேகாமங்கலம் சாலையிலும் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், பெரும்பாடி - சேம்பள்ளி - ஜிட்டப்பள்ளி சாலையிலும் கட்டப்பட்டுள்ள பாலங்களை திறந்துவைத்தார். 

மேலும் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பூவனூர் - காளாச்சேரி - முன்னவால் கோட்டை சாலையில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் - எமனேஸ்வரம் சாலையிலிருந்து பி.கொடிக்குளம் சாலை, பந்தப்பனேந்தலில், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், அனுமந்தீர்த்தம் - பொய்யப்பட்டி சாலையில், பன்னிமடுவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட 21 பாலங்களை முதல்வர் திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு வழி வகுத்தார்.