துணிச்சலானவர்! சிரித்துக் கொண்டே இருப்பவர்! சினிமா ஸ்டார் போன்றவர்! கலங்கிய சுபஸ்ரீ சுற்றமும் நட்பும்..!

விபத்தில் இறந்த சுபஸ்ரீயின் நெருங்கியவர்கள் அவரைப்பற்றி கூறிய செய்திகள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளன.


சென்னையில் ரேடியன் சாலையில் அமைந்துள்ள மண்டபத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இதற்காக சாலை முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் பிரம்மாண்டமாக அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தன. இங்கு இருசக்கர வாகனத்தில் பி.டெக் படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி சென்று கொண்டிருந்தார்.

சாலையோரத்தில் அமைந்திருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் சுபஸ்ரீ நிலைதடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது. 

இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள பலரையும் 2 நாட்களாக பெரிதளவில் பாதித்துள்ளது. இந்நிலையில் இன்று அவருடைய இறுதிச்சடங்கு நடைப்பெற்றது. இந்த சடங்கில் கலந்து கொண்ட பலர் சுபஸ்ரீ பற்றிய இன்பமான நிகழ்வுகளை பரிமாறிக்கொண்டனர்.

அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான சசிகலா என்பவர் கூறுகையில், "சுபஸ்ரீ மிகவும் தைரியமானவர். அவர் எப்பொழுதும் சிரித்த முகமாகவே காணப்படுவார். அவர் சினிமா ஸ்டார் போல வலம் வந்து கொண்டிருந்தார்" என்று கூறினார்.

சுபஸ்ரீவுடைய நீண்டகால அக்கம்பக்கத்தினரான ராஜலட்சுமி என்பவர் கூறுகையில், " சுபஸ்ரீ மிகவும் தெளிவானவர். நன்றாக படிப்பார். சுபஸ்ரீ குடும்பத்தினர் அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகக்கூடியவர்கள்" என்று பகிர்ந்து கொண்டார்.

சுபஸ்ரீ உடன் ஒரே பள்ளியிலும், பணியிடத்திலும் வேலை பார்த்து வரும் ராஜகோபாலன் என்பவர் கூறுகையில், "அவர் மிகவும் திறமையானவர். புதுப்புது தொழில்நுட்பங்களை உடனடியாக கற்றுக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர். அவருடைய மறைவானது எங்கள் அனைவருக்கும் பெருத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று கண்ணீர் மல்க கூறினார்.

சுபஸ்ரீயின் தந்தையுடன் பணியாற்றிய ரவி என்பவர் கூறுகையில், "சுபஸ்ரீ கனடா நாட்டிற்கு செல்வதற்கு ஆயத்தம் ஆகியிருந்தார். என்னையும் கனடாவிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தார்" என்று மிகவும் நொந்துபோய் கூறினார்.

சுபஸ்ரீயின் உற்றார் உறவினர்கள் அனைவரும் வேண்டுவது ஒன்றே. சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் சட்டத்தின்முன் தண்டிக்க வேண்டும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்று பாராமல் அனைவருக்கும் உரிய தண்டனையை அளிக்க வேண்டும் என்பதே ஆகும்.

அவ்வாறு நடந்தால் தான் அவருடைய ஆன்மாவிற்கு சாந்தி கிடைக்கும். இந்த சம்பவமானது 2 நாட்களாக தமிழகத்தை உலுக்கி வருகிறது.