தி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்..? தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.

இனியும் தி.மு.க.வில் இருந்தால் அரசியல் எதிர்காலம் வீணாகிவிடும் என்று தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் கட்சி மாறிவருகின்றனர். குறிப்பாக வி.பி துரைசாமி, கு.க செல்வத்தைத் தொடர்ந்து திமுகவிலிருந்து இன்னொரு முக்கிய புள்ளி விரைவில் வெளியேற இருப்பதாக தெரியவந்துள்ளது.


நெல்லை மேற்கு மாவட்டத்தின் செயலாளராக சிவபத்மநாபன் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இதே மாவட்டத்தைச் சேர்ந்த திமுக வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியனுக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தம்தான். ஒருவர் நடத்தும் விழாவுக்கு மற்றவரை அழைப்பதில்லை.

அதனால் இரு தரப்புகளுக்கும் இடையில் அடிதடி, மோதல் எல்லாம் நடந்து வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன. மேற்கு மாவட்டத்தை இரண்டாக பிரித்து கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அடங்கிய மாவட்டத்திற்கு செயலாளராக வேண்டும் என காய் நகர்த்தினார் அய்யாதுரை பாண்டியன். கடையநல்லூர் தொகுதியை குறிவைத்து களப்பணியும் செய்து வருகிறார்.

எனினும் அய்யாதுரை பாண்டியன் ஸ்டாலினின் குட்புக்கில் அண்மைக்காலமாக இடம்பெறவில்லை. சமீபத்தில் இவரையும், சிவபத்மநாபனையும் அறிவாலயத்திற்கு அழைத்து பஞ்சாயத்து நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் முன்னிலையிலேயே சீறியிருக்கிறார் அய்யாதுரை பாண்டியன்.

இத்தகைய பின்னணியில் நெல்லை மேற்கு மாவட்டத்தை இரண்டாக பிரிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தனி தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டப் பொறுப்புக்கு தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமாரின் பெயர் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடையநல்லூர், தென்காசி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு பொறுப்பாளராக சிவபத்மநாபன் நியமிக்கப்படவிருக்கிறார்.

இதில் கடையநல்லூர் தொகுதியின் மாவட்டப் பொறுப்பாளராக சிவபத்மநாபனை நியமிக்க அறிவாலயம் முடிவெடுத்திருப்பது அய்யாதுரை பாண்டியன் தரப்பை கொதிக்க வைத்திருக்கிறது.

இதனால் கடுப்பான அய்யாதுரை பாண்டியன் கட்சி மாறுவதற்கு தயாராக இருக்கிறார். அ.தி.மு.க.வில் இணைவதா அல்லது பா.ஜ.க.வுக்குப் போவதா என்பதுதான் அவருடைய ஒரே குழப்பம்.