தமிழக படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படை... 4 மீனவர் நிலை என்ன?

தமிழக மீனவர் படகை இலங்கைக் கடற்படை மூழ்கடித்து நான்கு தமிழக மீனவர்கள் மூழ்கி உள்ளனர். அவர்களின் நிலை என்னவென்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.


இலங்கைக் கடற்படை ஊடகப் பேச்சாளர் இண்டிக்க டிசில்வ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ‘‘யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் நாங்கள் ரோந்து சென்ற போது தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் படகு ஒன்று எங்கள் ரோந்துப் படகில் மோதியது. இதன் காரணமாக எங்கள் படகு சேதமடைந்தது. நாங்கள் அவர்களை விரட்டும்போது அவர்கள் படகு நிலைதடுமாறி கவிழ்ந்து ஆழ் கடலில் மூழ்கிவிட்டது’’ என தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வு ஜனவரி 19 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நெடுந்தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் நடந்ததாகவும், தமிழகத்திலிருந்து இலங்கைக் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் அய்ம்பதிற்கும் அதிகமான படகுகள் ஊடுவியுள்ளன எனவும், இவ்வாறு இலங்கைக் கடல் எல்லைக்குள் வரும் படகுகளையும், மீனவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இலங்கைக் கடற்படை கூறியுள்ளது.

இலங்கைக் கடற்படையினரிடம் அதிநவீன ரேடார்களை இந்திய மத்திய அரசு தந்துள்ளது. அந்த ரேடார்கள் மூலம் கடற்பரப்பில் சிறிய இரும்பு பொருட்கள் இருந்தால்கூட தெரிந்துவிடும். அப்படி இருக்க மிகப்பெரிய மீன்பிடிப் படகு தங்கள் ரோந்து கப்பல் மீது மோதிவிட்டு மீனவர்கள் தப்பி ஓடும்போது மூழ்கிவிட்டார்கள் என்று இலங்கைக் கடற்படை சொல்வது எந்த வகையிலும் நம்பத்தகுந்ததாக இல்லை.

இதில் 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நிலை என்ன ஆனது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

தமிழக மீனவர்களை மிரட்டும் தொனியில் கற்களை வீசியும், ஆயுதங்களைக் கொண்டு தாக்கியும் வந்த இலங்கைக் கடற்படை தற்போது படகுகளை சேதப்படுத்தி மூழ்கடிக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. இது தொடர்பாக இன்றுவரை இந்திய அரசு எந்த ஒரு விளக்கமும் தராதது ஏன்?

தமிழக மீனவர்களுக்கும் இந்த விவகாரம் குறித்து இதுவரை கூறப்படவில்லை. இதுபற்றியெல்லாம் இந்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல் வராதது ஏன்? உரிய நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்திய ஊடகங்களும் வெளிப்படுத்தாதது ஏன்?

 இதன் மூலம் இலங்கை அரசும், இந்திய அரசும் கூட்டு சேர்ந்து தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூர தாக்குதலை மூடி மறைக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசு முறையில் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்தியதற்கு இதுதான் கைகண்ட பலனா என்று கேட்டுள்ளார்.