ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை வெளியேறக்கூடாது..! திருமாவளவன் ஆவேசம்

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து, உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக ஒரு விசாரணைப் பொறியமைவை உருவாக்க 2015ம் ஆண்டு ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை அரசும் இருந்தது. ஆனால், இப்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச, ‘ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசு ஒப்புக்கொண்ட எதையும் நிறைவேற்றப் போவதில்லை அந்த தீர்மானத்தில் இருந்து வெளியேறுகிறோம்’ என்று அறிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் முக்கியப் பங்கு வகித்த கோத்தபாய ராஜபக்ச தற்போது அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை அரசின் நடவடிக்கை அமைந்திருக்கிறது.

’உள்நாட்டு சட்டங்களைக் கொண்டு நாங்கள் நீதி வழங்க எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்’ என்று கோத்தபாய ராஜபக்ச கூறினாலும் அங்கு தமிழர்களுக்கு எவ்வித உரிமையும், நியாயமும் வழங்கப்படாது என்பதே வெளிப்படையான உண்மை . இந்நிலையில் தற்போதுள்ள அரசாங்கத்தைக் கலைத்து விட்டு புதிதாகத் தேர்தல் நடத்த கோத்தபய அறிவிப்புச் செய்துள்ளார்.

இதன் மூலம் பாராளுமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன் கையில் கொண்டு வருவதற்கு அவர் திட்டமிட்டு இருக்கிறார். அதன்பிறகு பாராளுமன்றத்தைப் பயன்படுத்தியே தமிழர்களுடைய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே சர்வதேச சமூகம் இதை வேடிக்கை பார்க்கக்கூடாது.

 2015ம் ஆண்டு தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் வெறுமனே வருத்தம் தெரிவித்ததோடு நின்றுவிடாமல் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முன்வரவேண்டும். இலங்கை அரசு அந்த தீர்மானத்தில் இருந்து வெளியேறி விட்ட நிலையில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் சுயேச்சையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைத்து இலங்கை இனப்படுகொலை குறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்,

இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகிவிடும் அதற்கு ஐநா மனித உரிமை கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.