ஐப்பசி மாதம் துவங்கியது..! தீபாவளி மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகள் இந்த மாதத்தில் தான்..! என்னென்ன தெரியுமா?

தமிழ் மாதங்களில் ஏழாவதாக வருவது ஐப்பசி மாதம் ஆகும். பருவகாலங்களில் முற்பனிகாலம் எனப்படும் பனிப்பொழிவு தொடங்கும் காலமாக இந்த ஐப்பசி மாதம் இருக்கிறது.


ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது.. பொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. இருப்பினும் ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம்.

ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இம்மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

துலா ஸ்நானம் : ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால் காவிரியில் இம்மாதத்தில் நீராடுவது துலா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது. துலா ஸ்நானம் நிகழ்வு, ஸ்ரீரங்கத்திலும் மயிலாடுதுறையிலும் சிறப்பாகக் கருதப்படுகிறது. காவிரியில் துலா ஸ்நானம் செய்வதால் நம்முடைய மற்றும் நம்முடைய முன்னோர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அழகு, ஆரோக்கியம், உடல்நலம், செல்வம், கல்வி, வலிமை, குழந்தைப்பேறு ஆகியவற்றை துலா ஸ்நானம் தருவதாகக் கருதப்படுகிறது. ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையில் காவிரி நீராடல் கடைமுழுக்கு என்றழைக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை : தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி திருவிழா : இத்திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. சூரபத்மனை எதிர்த்து முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வு விரதமுறையைக் கடைபிடிப்பது ஆகும்.

அன்னாபிஷேகம் : தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதிற்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அபிஷேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது. அன்னாபிசேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது.

கேதார கௌரி விரதம் : கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்கள் அனுஷ்டிப்பார்கள். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும், சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரதமானது கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி வரும் தீபாவளி நாளில் (27.10.2019) இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

தனத்திரயோதசி : ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்க நகைகளையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமிகுபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

தன்வந்திரி ஜெயந்தி: ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவான் தோன்றினார். எனவே திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவானை வழிபட நோய் நொடி இல்லா ஆரோக்கிய வாழ்வு கிட்டும்.

யமத் துவிதியை ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒற்றுமை ஏற்படுவதுடன் சகோதர சகோதரிகள் நீடித்த ஆயுள் கிடைக்கப் பெறுவர். சகோதரிகள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.

இந்திரா ஏகாதசி: ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா என்று அழைக்கப்படுகிறது. இது மூதாதையர்களுக்கு நற்கதி அளிக்கும். இவ்விரத நாளில் பால் அருந்தக் கூடாது.