கோவில் கொடி மரத்தை ஏன், எதற்கு எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?

பலிபீடத்தை அடுத்துள்ளது கொடிமரம். இதை வடமொழியில் துவஜஸ்தம்பம் என்கின்றனர்.


இது உயரமாக இருக்கும். நந்தி இதற்கு முன்போ பின்போ அமைக்கப்பட்டிருக்கும். கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன ஒரே நேர் கோட்டில் மூலவரை நோக்கி இருக்கும். 

கொடிமரம் நேராக உள்ளது போல் உடல் நேராக இருக்க வேண்டும் என்பது சாத்திரம். இதன் உயரம் மூலவரின் விமானத்திற்குச் சமமாகவோ அல்லது மண்டபங்களின் மேல் தளத்திற்குச் சமமாகவோ இருக்கும்.இதன் அதி தேவதை சிவன். அதுவே சிவனைக் குறிப்பதாக உள்ளது. 

இது மூன்று பாகமாகவுள்ளது. முதல் பாகம் சதுரமானது. அடிப்பகுதி இது பிரம்மாவையும், இரண்டாவது பாகம் எண் கோணவேதி அமைப்பு. இது விஷ்ணுவையும், மூன்றாவது பாகம் உருளை போன்ற தடித்த உயரமான மேல் பகுதி ருத்ரனையும் குறிக்கும் என்கிறது ஆகமங்கள். 

உச்சியில் உள்ள மூன்று குறுக்குக்கட்டைகள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியைக் குறிக்கின்றன. அதிலுள்ள இரு குறுக்குத்தண்டுகள் சூரிய, சந்திரனைக் குறிக்கின்றன. 

விழாக்காலங்களில் கொடி ஏற்றம் நடைபெறும்.அதில் கொடிக்கயிறு அனுக்கிரக சக்தியையும், கொடி வாயுவையும், கொடியில் வரையப்பட்டுள்ள நந்தி, நந்தி பகவானையும் குறிக்கிறது. 

இந்தக் கொடிமரத்தடியில்தான் கீழே விழுந்து வணங்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்யலாம். அஷ்டாங்கம் என்பது தலை, கைகள், காதுகள், முழங்கால்கள் ஆகிய ஒன்பதும் தரையில்படுமாறு விழுந்து வணங்குதல், பஞ்சாங்கம் என்பது கைகள், முழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் தரையில் படுமாறு குனிந்து வணங்குதல். 

கொடிமரத்தின் முன் மும்முறை விழுந்து வணங்க வேண்டும்.அதற்குக் குறையக் கூடாது. கிழக்கு நோக்கிய சந்நிதி எனில் வடக்கில் தலைவைத்துத் தெற்கில் கால் நீட்டி வணங்க வேண்டும். வடக்கில் சந்நிதி எனில் கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.