ஒரே எலுமிச்சையுடன் இந்த முருகனை தரிசித்தால் குழந்தை பாக்கியம்! எங்கு தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்று.


தொலைவில் இருந்து பார்த்தால் மயில் போல காட்சி அளிக்கும் குன்றின் மேல் அமைந்திருக்கின்றது பழைமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் ஆலயம். இவ்வாலயத்தின் கருவறையில் செப்பினாலான வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது.

வருடாவருடம் இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தப் 10 நாள் திருவிழாவில், ஒவ்வொருநாளும் கருவறையில் இருக்கும் வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள் பாதுகாத்து வைக்கப்படுகிறது. பத்தாவது நாளில் காவடி பூஜை முடிந்ததும் மறுநாள் இரவு அந்த எலுமிச்சைப் பழங்கள் ஏலம் விடப்படுகிறது.

அன்று இரவு ஆலயத்தில் இடும்பன் பூஜை நடத்தப்பட்ட பின்பு அந்த ஊர் நாட்டாமை ஆணி செருப்பின் மீது ஏறி நின்று முதல் எலுமிச்சைப் பழத்திற்கான ஏலத்தை 1 ரூபாயில் தொடங்குகிறார். அந்த ஒரு எலுமிச்சை பழம் கிட்டதட்ட 20 ஆயிரம் வரை ஏலத்தில் எடுக்கப்படுகிறது. இந்த வருடம் நடந்த ஏலத்தில் 10 எழுமிச்சை பழங்களும் சேர்த்து 68,000 ரூபாய்க்கு ஏலம் போனது.

இந்த எலுமிச்சை பழங்களை ஏலம் எடுப்பவர்களுக்கு இடும்பனுக்கு படைக்கப்பட்ட பிரசாதமும் எலுமிச்சை பழமும் வழங்கப்படுகிறது. பிரசாதத்தை அங்கேயே உண்டுவிட்டு, அடுத்த நாள் காலை வீட்டில் பூஜை செய்து அந்த எலுமிச்சை பழத்தை கொட்டையோடு சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கப்படுகிறது. இதனால் கண்டிப்பாக புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கடந்த வருடம் எலுமிச்சை பழத்தை ஏலத்தில் எடுத்த பல தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைத்துள்ள நிலையில் அவர்களுக்கும் இடும்பனின் படையல் இந்த வருடம் கொடுக்கப்படுகிறது. எலுமிச்சை பழத்தை அந்த ஊர் மக்கள் மட்டும் தான் ஏலம் கேட்கவேண்டும் என்பதால் மற்ற ஊரை சேர்ந்தவர்களுக்கு எலுமிச்சை பழம் தேவை படுமாயின் அந்த ஊர்மக்கள் அவர்களின் சார்பாக ஏலத்தில் கலந்துகொண்டு எந்த கைமாறும் இன்றி எலுமிச்சை பழத்தை பெற்று தருகின்றனர்.