ரஜினி ரசிகர் குடும்பமே ஆற்றில் மூழ்கிய பெருஞ்சோகம்! நாமக்கல் அருகே பரிதாபம்!

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொத்தனூர் பகுதியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த இடம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ளது.


இதேப் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் நீண்ட காலமாக நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத்தில் பணியாற்றி வருகிறார்.இவர் மனைவியின் பெயர் ஜோதிமணி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பொத்தனூர் பகுதியில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், புகைப்படக் கலைஞரான சரவணன் என்பவர் அங்கு குளிப்பதற்கு, தன் மனைவி, 2 மகள்கள் மற்றும் பக்கத்து வீட்டுச் சிறுவர்களை அழைத்து சென்றுள்ளார்.

 ஆற்றில் மணல் அள்ளப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் குளித்து கொண்டிருந்தனர். திடீரென்று அவர்கள் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த பொதுமக்கள் மீட்புக் குழுவினருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மீட்புக் குழுவினர், அப்பகுதி பொதுமக்கள், தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சரவணன், அவரின் மனைவி ஜோதிமணி உட்படச் சிறுமி ஒருவர் என மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மூவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேடப்பட்டு வரும் மூவரும் சிறுவர்களாவர். பல மணிநேரமாகத் தேடப்பட்டு வருவதால், அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தை எஸ்பி, கலெக்டர் நேரில் வந்து பார்த்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.