பூமாதேவி கைகளில் சீதாதேவி! வளரும் புற்களை சீதாதேவியின் கேசமாக மதித்து வணங்கும் பக்தர்கள்! சீதா மாஹி தரிசன மகிமை!

வனவாசம் முடித்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்டுக் கொண்டு நாடு திரும்பிய ஸ்ரீராமன் நல்லாட்சி செய்து வந்தான்.


சீதை கர்ப்பமானாள். அப்போது இரண்டாவது முறையாக தன்னுடைய தூய்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு சீதை ஆளானாள். கயவன் ஒருவன் பேசிய பேச்சால் கலங்கிய மனதோடு வேறு வழியின்றி கட்டிய மனைவியை கானகம் அனுப்பினார் ராமர்.  

வால்மீகி ஆசிரமத்தில் சீதைக்குப் பிரசவம் நிகழ்ந்தது. மைந்தர்கள் லவ குசனோடு அங்கேயே வாழ்ந்தவள், தகுந்த காலத்தில் தனையன்கள் தந்தையைக் கண்ட பின் அயோத்திக்கு வந்தாள். அப்போதும் அவளுக்கு கற்புக்கு சோதனை வந்தது. அனல் புகுந்து எழுந்த பின்னரும் அடாத பேச்சுவரவே, பூப்போன்ற சீதையின் மனம் புண்ணானது. எனவே பூமித் தாயை வேண்டினாள். 

பூமாதாவே, நான் தூய்மையானவள் என்பது உண்மையானால், என் மனதில் ஸ்ரீ ராமனைத் தவிர வேறு எவரையும் நினைத்ததில்லை என்பது சத்தியமானால் உன் மடியில் நீயே எனக்கு இடம் கொடு என்று கூற மறு வினாடியே பூமி பிளந்தது. பூமாதேவி தானே வெளிப்பட்டு சீதையைக் கரம்பிடித்து அழைத்துத் தன் மடியில் அமர்த்திக்கொண்டு மறைந்தாள். உத்தர ராமாயணம் கூறும் இந்த நிகழ்ச்சி நடந்த இடம் சீதா மர்ஹி என்றழைக்கப்படுகிறது. இங்கே சீதைக்கு ஒரு கோவிலும் அமைந்துள்ளது. 

துறவி ஒருவர் ரிஷிகேஷிலிருந்து கங்கை நதி ஓரமாக பாதயாத்திரை மேற்கொண்டார்.  பல கிலோ மீட்டர் பயணம் செய்து இத்தலத்தை அடைந்தவர், வால்மீகி முனிவர் தங்கியிருந்த ஆசிரமத்தையும் பெரிய மணல் கட்டி போன்ற கல்லையும் கண்டார். அந்தக் கல்லைப் பார்த்ததும் ஏதோ ஒரு உணர்வு தோன்ற அதை எடுத்து சுத்தம் செய்து பூஜிக்க ஆரம்பித்தார்.

அவரை அறியாமல் உடலில் ஒரு புதிய வேகத்தை உணர்ந்தார். அப்போது சில பெண்கள் அங்குள்ள புற்களைக் காட்டி இவற்றை சீதாபிராட்டியின் கேசமாகக் கருதி நாங்கள் நீண்ட காலமாக வணங்கி வருகிறோம். இந்தப் புற்களை பசுக்கள் சாப்பிடாது என்றனர். இந்த இடத்தின் மகிமையை உணர்ந்த துறவி அந்த இடம் குறித்த விஷயங்களை தேடிய பொழுது அது சீதாபிராட்டி பூமிக்குள் புகுந்த இடம் என தெரியவந்தது.

எனவே இங்கு சீதா தேவிக்கு ஆலயம் எழுப்ப திட்டமிட்டார். ஆனால் அந்த பணியை முடிப்பதற்கு முன் அவர் மறைந்து விட அவருடன் பழகிய ஒருவர் பக்தர்களிடம் காணிக்கை பெற்று கோயிலை கட்டி முடித்தார். அதுவே இன்று நாம் காணும் சீதா மர்ஹி கோயில். 

வட இந்திய பாணியில் கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு கோயிலினுள் நேரே உள்ள ஒரு மேடை மீது சீதாபிராட்டியை பூமாதேவி தன் கைகளில் தாங்கி இருக்கும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். மற்றொரு இடத்தில் சீதாதேவியின் பின்னால் லவகுசலர்கள் அஸ்வமேத யாக குதிரையைப் பிடிக்கும் காட்சி ரசிக்க வைக்கும். 

முதல் தளத்தில் ராமர் சீதை மற்றும் வானரர்களின் புடைப்புச் சிற்பமும், சீதையை தனது ரதத்தில் ராவணன் கடத்திச் செல்லும் ஓவியமும் உள்ளது. இங்கு 20 அடி உயர செயற்கைக் குன்று ஒன்று இருக்கிறது. இதன் மீது 108 அடி உயரத்தில் பிரமாண்டமான கோலத்தில் அஞ்சனை மைந்தன் தரிசனம் தருகிறார். அதன் கீழே உள்ள குகையில் ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. இதன் பக்கத்தில் உள்ள பழமையான கோவில் தான் சீதை பூமிக்குள் புகுந்த இடம் என்கிறார்கள்.