ஜெயராஜ்-பென்னிக்சை விடிய விடிய அடித்தார்கள்! லத்தியில் ரத்தக்கறை! துணிச்சலாக சாட்சியம் அளித்த பெண் போலீஸ் ரேவதி !

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் இதனால் லத்தி மற்றும் காவல் நிலைய டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும் அங்கு பணியாற்றி வரும் பெண் காவலர் ரேவதி துணிச்சலாக சாட்சியம் அளித்துள்ளார்.


சாத்தான் குளம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அங்கு நடந்தது என்ன என்று விசாரித்து அறிக்கை அளிக்க கோவில்பட்டி மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை அடுத்து கடந்த ஞாயிறன்று பாரதிதாசன் அங்கு சென்று விசாரணை நடத்தினார். சுமார் 16 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

இதன் பிறகு அங்கு நடைபெற்ற விசாரணை விவரங்களை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், காவல் நிலையத்திற்கு சென்ற தன்னை நீதிபதி என்றும் பார்க்காமல் அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த ஏஎஸ்பி குமார் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆவணங்களை கேட்ட போது அதனை உடனடியாக கொண்டு வந்து கொடுக்காமல் அங்கிருந்த போலீசார் தாமதம் செய்ததாகவும் மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் நீதிமன்ற பணியாளர்களை கிண்டல் செய்யும் வகையிலும் அவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலும் போலீசாரின் செயல்பாடுகள் இருந்ததாகவும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான பெண் காவலர் ரேவதி தன்னிடம் சாட்சியம் அளித்ததாகவும் அப்போது பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை விடிய விடிய லத்தியால் போலீசார் தாக்கியதாகவும் இதனால் லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும் ரேவதி தன்னிடம் கூறியதாக மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் லத்தியை பறிமுதல் செய்ய அவற்றை எங்கே என்று கேட்ட போது போலீசார் தன்னிடம் ஒப்படைக்காமல் போக்கு காட்டியதாக கூறியுள்ளார்.

மகாராஜன் எனும் காவலர் லத்தியை கொடுக்காமல் தனக்கு முதுகுக்கு பின்னால் சென்று உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது என்று என்னை மறைமுகமாக பேசியதாகவும் மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். பிறகு அவரை தோளில் கை வைத்து தள்ளி லத்தியை பறிமுதல் செய்ததாகவும் மற்றொரு காவலர் இதற்கிடையே லத்தியை கொடுக்காமல் எகிறி கொடுத்து ஓடியதாகவும் மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சம்பவத்தின் நேரடி சாட்சியான காவலர் ரேவதி மிகுந்த பதற்றத்துடன் இருந்ததாகவும் அவர் நான் பேசுவதை அவர்கள் கேட்பார்கள் என்றும் அவர்களுக்கு நான் பேசுவது தெரியக்கூடாது என்று அச்சத்துடன் கூறியதாகவும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். பிறகு பெண் காவலர் ரேவதியை ஆசுவாசப்படுத்தியே நடந்த சம்பவத்தை சாட்சியாக பதிவு செய்ததாகவும் பாரதிதாசன் கூறியுள்ளார்.

இதற்கிடையே இரண்டாவது முறையாக இன்றும் ரேவதியிடம் மாஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது தயக்கம் இன்றி ரேவதி உண்மைகளை கூறியதாக சொல்கிறார்கள். ஒட்டு மொத்த காவல்துறையே ஜெயராஜ் பென்னிக்ஸ் விவகாரத்தில் ஒன்றுபட்டுள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் அநியாயமாக உயிரிழந்த இரண்டு உயிர்களுக்காக சக காவலர்களை பகைத்துக் கொண்டு உண்மையை கூறிய ரேவதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.