மக்களை திசைதிருப்பும் நாடகம் போன்று விஜய்யின் சர்கார் படத்துக்கு நெருக்கடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது அ.தி.மு.க. அரசு. வியாபார உத்திக்காகவே இன்றைய அரசியல் நிலைமையை பயன்படுத்திய சர்கார் குழு, அதே காரணத்துக்காக மாட்டிக்கொண்டு விழிக்கிறது.
முட்டாள் சர்க்கார் Vs அடிமுட்டாள் சர்கார்..!
எந்த சர்கார் அடிமுட்டாள் என்று கணக்குப் போடாமல் இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், தமிழர்களை சினிமாகாரர்களும், அரசியல்வாதிகளும் எத்தனை முட்டாள்களாகப் பார்க்கிறார்கள் என்பது புரியும்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பதுடன் வியாபார நெளிவுசுளிவுகளுக்குக் கட்டுப்பட்டது,. அதனால் காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்ப பரபரப்பாக எதையாவது சேர்ப்பது வழக்கம்தான். அந்த வகையில்தான் கோமளவல்லியையும், இலவசப் பொருட்களையும் சாதாரண பொதுமக்கள் மிக எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால், நம் அரசியல்வாதிகளின் கொந்தளிப்பு இருக்கிறதே... அய்யய்யே ரகம். அதாவது ஜெயலலிதா மீது அமைச்சர் பெருமக்கள் எல்லாம் மிகவும் பாசத்தோடு இருக்கிறார்களாம், அதனால்தான், அவரது பெயரை வில்லிக்கு வைத்ததால் கொந்தளிக்கிறார்களாம்.
ஜெயலலிதா செத்துக்கிடந்த தினத்தன்றே, அவர் எப்படி செத்தார், யார் காரணம் என்றெல்லாம் கவலைப்படாமல் பதவியேற்றுக்கொண்ட பேருள்ளம் படைத்தவர்கள்தானே இவர்கள்.! அதனால் ஜெயலலிதாவின் பெயரை உச்சரிக்கும் தகுதிகூட, இன்றைக்கு அ.தி.மு.க.வில் இருக்கும் அடிமைக் கூட்டத்தில் எவருக்கும் இல்லை. மேலும் பெயர் வைக்கக்கூடாத அளவுக்கு ஜெயலலிதா ஒன்றும் நேர்மையின் சிகரமும் இல்லை, நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற குற்றவாளிதானே.
இலவசப் பொருட்களை தூக்கிப் போடுவது குற்றமாம். அடப்பாவமே, அவனவன் பதவி கொடுத்தவளை தூக்கி வெளியே போடுகிறான். வேலை கேட்டு வரும் பெண்ணை கர்ப்பிணியாக்கி அனுப்பிவைக்கிறான். உறவினர்களுக்கு மட்டும் டெண்டர் கொடுத்து கொள்ளை லாபம் பார்க்கிறான். தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்வதற்கு அனுமதி கொடுத்து லாபம் பார்க்கிறான். மக்கள் பணத்தை இப்படியெல்லாம் கொள்ளையடிப்பது தவறு இல்லையாம். ஆனால், தங்களுக்குக் கிடைத்த இலவசப் பொருளைக் கொண்டுவந்து எரிப்பதாக காட்சி அமைப்பது தவறாம்.
அவனவனுக்குக் கிடைத்த பொருளை அவன் பயன்படுத்தினால் என்ன, தூக்கி குப்பைக்குள் போட்டால் இவனுக்கு என்ன?
ஆனால், திடீரென சர்காருக்கு எதிராக ஆளும் கட்சி அலப்பரை செய்வதற்கு ஏதேனும் காரியம் இருக்கவே செய்கிறது.. அதாவது, காலம் காலமாக அரசியல்வாதிகள் செய்துவரும் திசை திருப்பும் நாடகம் இது.
தினகரன் சிக்கல், இடைத்தேர்தல் கெடுபிடி, நீதிமன்ற மிரட்டல், டெல்லி சிக்கல் போன்ற அத்தனையும் மறக்கடித்து, மக்களுக்கு நல்லதொரு காமெடி திருவிழா நடத்தி வருகிறார்கள்.
ஒரு படைப்பாளிக்கு, அவன் படைப்பை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு முழு உரிமை இருக்கிறது. ஒரு முட்டாள் குழுவினர் அதனை எதிர்க்கிறார்கள் என்பதற்காக, வில்லி பெயரையும், இலவசப் பொருள் எரிப்பு காட்சியையும் நீக்குகிறார்கள். என்றால், இவர்கள் எப்பேர்ப்பட்ட முட்டாள்கள்.? அதாவது பரபரப்புக்காக மட்டுமே இதுபோன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதாலே, அதனை வெட்டி எறியவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆக, படம் தயாரித்தவர், இயக்குநர், நடிகர் விஜய் ஆகிய எவருக்கும் சுய மரியாதையோ, தங்கள் படைப்பின் மீது மதிப்பும் கிடையாது என்பதுதான் உண்மை. ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்ட திரைப்படத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்றால், அதனை நீதிமன்றம் சொல்லட்டும் என்று கெத்து காட்டியிருந்தால், படைப்பாளிகள் என்று இவர்களைப் பார்த்து பெருமிதப்படலாம்..
அல்லது இந்தப் படம் வசூலாகவில்லை என்றால் அடுத்த நொடியே கலாநிதி மாறன், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகியோர் நடுத்தெருவுக்கு பிச்சை எடுக்க வந்துவிடுவார்கள் என்றாலும் இவர்களை மன்னிக்கலாம்.
ஆனால், இவர்கள் பணம் பார்ப்பதற்காக பல்டி அடிக்க மட்டுமல்ல, காலில் விழவும் தயங்காதவர்கள்.. அதனால்தான் தங்கள் படைப்பை கழுத்தை நெரித்துக் கொலை செய்கிறார்கள். தங்கள் படைப்பை மதிக்காத இவர்களை, அதனால்தான் மக்களும் மதிக்கவில்லை.
இப்போது எந்த சர்கார் அடி முட்டாள் என்று நீங்கள் முடிவுக்கு வந்திருக்க வேண்டுமே..!