இரவு நேரத்தில் அம்மனின் கொலுசு சத்தம்..! ஆங்கிலேய அதிகாரியின் தரிசன அனுபவம் இது.

நமது நாடு ஆங்கிலேயர் பிடியில் இருந்தபோது சமயபுரம் பகுதியில் நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார் ஒரு ஆங்கிலேயர்.


இந்தியர்கள் கூறினாலே இவருக்கு பிடிக்காதாம். சாதாரணமாக நகருக்குள் மக்கள் நடமாடினால் கூட நிற்க வைத்து கேள்வி கேட்பாராம். எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை காட்டி மிரட்டுவாராம். நானே இந்த பகுதியின் அதிகாரி, நான் வைத்ததே சட்டம் என்று மிகவும் கெடுபிடி செய்து வந்தாராம்.

அவரின் அரசாங்க இல்லம் சமயபுரம் கோயிலில் அருகில் இருந்திருக்கிறது. ஒரு நாள் இரவில் இவர் உறங்கிக் கொண்டிருந்த பொழுது நடுநிசியில் தெருவில் விட்டுவிட்டு கொலுசு சத்தம் கேட்டிருக்கிறது. எழுந்து ஜன்னல் வழியே பார்த்த போது யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உடனே வாசலில் நிற்கும் காவலாளியை கூப்பிட்டு அது யார் என்று பார்க்கச் சொல்லியிருக்கிறார். அவரும் சென்று பார்த்துவிட்டு வந்து யாரையும் காணவில்லை என்று சொல்லியிருக்கிறார். சரியென்று அதிகாரி உறங்கிவிட்டாராம். அடுத்த நாள் இரவும் குறிப்பிட்ட நேரத்தில் அதேபோல் கொலுசு சத்தம் கேட்டிருக்கிறது. மீண்டும் தனது காவாலாளியைக் கூப்பிட்டுப் பார்த்து வரச் சொல்ல அவரும் சென்று பார்த்துவிட்டு வந்து அங்கே யாரும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்..

மூன்றாம் நாள் கொலுசு சப்தம் வந்த உடன் அதிகாரி துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி தேடியிருக்கிறார். தொலைவில் ஒரு பெண் உருவம் தலையில் ஒரு பானையை ஏந்தியபடி செல்வது அவருக்கு தெரிந்தது. உடனே ஏய் நில்லு என்று சப்தம் கொடுத்திருக்கிறார். அந்த உருவம் நிற்காமல் தொடர்ந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதிகாரி அந்தப் பெண்ணைத் துரத்தியபடி ஓடி தனது துப்பாக்கியை எடுத்து குறி பார்த்துச் சுட்டிருக்கிறார். துப்பாக்கிச் சப்தம் கேட்டு ஊர் மக்கள் எல்லோரும் ஏதோ என்று பதறியபடி ஓடி வந்திருக்கிறார்கள். கோவிலுக்கு அருகாகச் சென்ற அந்தப் பெண் கோயில் வாசலில் அப்படியே மறைந்திருக்கிறாள்.

ஊர்மக்கள் அதிகாரியிடம் அது தங்களின் காவல் தெய்வமான மாரியம்மன் என்றும், ஊரைக் காக்க மஞ்சள் வேப்பிலை நீர் தெளித்துச் செல்வதாக தெரிவிக்கிறார்கள். இதை நம்பாத அதிகாரி கோயிலை திறக்கச் சொல்லுகிறார். பூசாரியும் திறந்து விடுகிறார். கோயிலுக்குள் வருகிற அதிகாரி கோயில் பிரகாரத்தில் யாரையும் காணாது கருவறையையும் திறக்கச் சொல்ல பூசாரி அந்த நேரத்துக்கு அம்மனின் கருவறையை திறக்க மறுக்கிறார்.

உடனே அதிகாரி, கருவறை கதவில் இருந்த சிறு துளை வழியாக உள்ளே பார்க்க நெருப்பு ஜுவாலையுடன் மாரியம்மன் அமர்ந்திருப்பது தெரிகிறது. அத்துடன் அவருக்கு எல்லாம் இருண்டு விடுகிறது. ஐயோ அம்மா என் கண் போச்சே என்று அலறியிருக்கிறார். கதறி அழுத அவர் ஊர் மக்களிடம் தான் கண்டதைச் சொல்லியிருக்கிறார். நாங்கள் எவ்வளவு சொல்லியும் தாங்கள் நம்பவில்லை. மூடப்பட்டிருந்த கருவறைக்குள் எட்டிப் பார்த்தீர்கள். அதனால்தான் மாரி தண்டனை கொடுத்து விட்டாள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தனது தவறுக்கு மனம் வருந்திய அதிகாரி மாரியம்மனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்டு வழிபட்டு தனது பார்வையை திரும்பப் பெற்றார் என்று சொல்கிறார்கள். அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு பார்வை மீண்டதிலிருந்துதான் கண்ணோய் தீர சமயபுரத்தாளை வழிபடும் பழக்கம் ஆரம்பித்தது. தவிர இந்தப் பகுதியில் இன்றும் நடுநிசியில் கொலுசு சத்தம் கேட்கிறது என்றும், சமயபுரத்தாளே ஊரை காவல் காக்கிறாள் என்று சொல்கிறார்கள்.