அதிகாலை 6 மணிக்கு கள ஆய்வு

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 21


பொதுமக்கள் கூட்டத்திற்கு இடையில் அதிகாரிகள் படை சூழ பகல் நேரங்களில் கள ஆய்வு செய்யும் அரசியல்வாதிகளிடம் இருந்து வித்தியாசமானவராக இருந்தார் மேயர் சைதை துரைசாமி. அதிகாலை 6 மணிக்கு கள ஆய்வு என்று மேயரான சைதை துரைசாமி அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டதும் அத்தனை பேரும் குழப்பமானர்கள்.

’நன்றாக விசாரியுங்கள், மாலை 6 மணியாக இருக்கும் என்று மீண்டும் ஒரு முறை கேட்டார்கள். அதற்கு, ‘அதிகாலை 6 மணிக்கு கள ஆய்வு தொடங்கி 9 மணிக்குள் முடித்துவிட வேண்டும்’ என்று சைதை துரைசாமி தெளிவு படுத்தினார்.

இந்த திட்டம் புதுமையானது என்றாலும் உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் தயங்கினார்கள். ஏனென்றால் அதிகாலையில் கள ஆய்வுக்கு மேயருடன் சென்றாலும், மாலை வரை அலுவலகப் பணியும் செய்ய வேண்டியது இருக்கும். இதனால் உழைக்கும் நேரம் கன்னாபின்னாவென்று அதிகரித்துவிடுவதுடன் உடலும் மனதும் சோர்ந்துவிடும்.

எனவே, ‘அதிகாலையில் எதற்காக கள ஆய்வு?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு சைதை துரைசாமி, ‘’நாம் ஆய்வுக்குச் செல்லும் நேரம் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது. மேலும் நாம் ஆய்வுக்குச் செல்லும் பகுதியில் மக்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் ஆய்வு நடத்தினால் தான், அவர்கள் நிதானமாக வந்து தங்கள் பிரச்னையை சொல்ல முடியும். ஏரியாவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் வேலைக்குச் சென்றுவிட்ட பிறகு அங்கு நாம் விசாரிப்பதும் ஆய்வு நடத்துவதும் அர்த்தமுள்ளதாக இருக்காது. அதுமட்டுமின்றி, காலை 9 மணிக்கு மேல் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடும், மற்றவர்களுக்கு இடையூறாக நாம் இருக்க வேண்டாம்..’’ என்றார் தெளிவாக.

மக்களுக்கு நன்மை தரும் புதுமையான செயல் என்று அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், மனதுக்குள் வேலை நேரம் அதிகரிப்பு குறித்த எரிச்சல் இருந்தது. எனவே, தயக்கத்துடனே இருந்தார்கள். இதற்கும் ஒரு விடை கொடுத்தார் சைதை துரைசாமி.

- நாளை பார்க்கலாம்.