மகன் பரசுராமனால் தலை வெட்டப்பட்ட தாய் ரேணுகா தேவி..! எப்படி மீண்டும் உயிர் வந்தது தெரியுமா?

மகாராஷ்டிராவின் லோனாவாலா குகைக்கு முன் ஏக்விரா ஆய்மந்திர் உள்ளது.


தென்னிந்தியாவில் மற்றும் வடநாட்டின் எல்லையோரப் பகுதிகளில் கும்பிடப்படும் ரேணுகாவின் ஒரு வடிவம்தான் ஏக்விரா. அப்பகுதி பிராமணர்கள், விவசாயம் செய்பவர்கள் மற்றும் மீனவர்களின் கண்கண்ட தெய்வம் ஏக்விரா.

ஒரு காலத்தில் புத்த மதம் மற்றும் சமண மதம் தழைத்திருந்த இடம். அதன் துறவியர் மடங்கள் இந்தக் குகைகளில் அமைந்திருந்தன. இன்று இந்தக் குகைகள் மஹாராஷ்டிராவின் தொல்பொருள் இலாக்காவின் கையில் உள்ளது. இந்த குகைக்கு வெளியே இரண்டு கோயில்கள் உள்ளன. அந்த இரண்டில் ஒன்றில் ஏக்விரா அம்மனை தரிசிக்கலாம்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், இமாச்சல் மற்றும் தமிழ்நாட்டில் எல்லையோரப் பகுதிகளில் ரேணுகாவுக்கு கோவில்கள் உள்ளன. மகாபாரதத்தில் ரேணுகா பற்றி கதை உள்ளது.

ஒரு மன்னனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இந்த சூழலில் சிவனை திருப்திப்படுத்த மிகப் பெரிய யாகம் செய்தான். சிவனும் யாகத்திலிருந்து ஒரு குழந்தை எழும் பாக்கியத்தை அளித்தார். ரேணுகா எனப் பெயரிடப்பட்டாள். அந்தக் குழந்தை வளர்ந்து வந்தபோது அந்தப் பக்கம் வந்த அகத்தியர் இந்தப் பெண்ணை ஜமதக்னிக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என கூறிச் சென்றார். திருமண வயது வந்ததும் ஜமதக்னி முனிவருக்கே ரேணுகா திருமணம் செய்து தரப்பட்டாள்.

ரேணுகா முனிவருக்கு நல்ல பணிவிடைகளைச் செய்து ஐந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்து வந்தாள். தினமும் ஆற்றில் குளித்துப் பச்சை மண்ணில் தன்னுடைய மனோபலத்தால் அதனை ஒழுகாத குடமாக்கி, தண்ணீர் நிரப்பி தலையில் வைத்துக் கொள்ள ஏதுவாய் ஒரு பாம்பை பிடித்து சுற்றி தலையில் வைத்துக் கொண்டு அதன் மீது சொட்டாத பச்சைப்பானை நீரை கொண்டுவந்து முனிவருக்கு தருவாள். அவர் அதனை வைத்து பூஜைகள் செய்வார்.

ஒருநாள் ஆற்றில் இரண்டு கந்தர்வர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒருவனைப் பார்த்து ஆகா எவ்வளவு அழகு என யோசித்தாள். அவளுடைய சக்தி போனது. பச்சைப் பானை பிடித்து தண்ணீர் நிரப்ப முயற்சித்தபோது பானை உருவாகவில்லை. இதனை அறிந்த முனிவர் இனி என்னுடன் வாழ நீ லாயக்கற்றவள் என்று கூறி தன்னுடைய மகன்களைக் கூப்பிட்டு தாயை வெட்டச் சொன்னார். நான்கு மகன்களும் தாயை வெட்ட முன்வரவில்லை. இதனால் தன் பேச்சை கேட்காத மகன்களை சாம்பலாகச் சபித்தார். அந்த சாம்பலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதாள் ரேணுகா. அப்போது ஐந்தாவது மகன் வந்தான். தந்தை ஜமதக்னி அவனிடம் தாயை வெட்டிக் கொல் என்றார். பரசுராமர் உடனே தன்னுடைய கோடாலியால் தாயை வெட்டி சாய்த்தான்.

மகிழ்ந்த தந்தை உனக்கு ஒரு வரம் தருகிறேன், என்ன வேண்டும் கேள் என்றார். என் தாயையும் நாலு சகோதரர்களையும் உயிர்ப்பித்துத் தரவேண்டும். உடனே முனிவரும் தன் கமண்டலத்தில் இருந்து தண்ணீரைத் தெளித்து அம்மா, நாலு சகோதரர்களையும் உயிர்ப்பித்தார். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. ரேணுகா உயிர் பெறும் போது அவரிடமிருந்து ஒரு ஜீவ ஒளி புறப்பட்டு பல பாகங்களாக பிரிந்து பல திசைகளில் சென்றது. அது சென்றடைந்த இடங்களில் இன்று ரேணுகா கோயில் கொண்டிருக்கிறாள்.

மகன்கள் தாய் ரேணுகாவைக் கையெடுத்து கும்பிட்டனர். அவள் இறை வடிவம் என்பதை அறிந்தனர். அதுமுதல் அவன் தெய்வமானாள். ரேணுகாவை கர்நாடகத்தில் எல்லம்மா, ஜகதாம்பா எனவும் அழைப்பர்.