அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் அதிரடி நீக்கம்! விஸ்வரூபம் எடுத்த எடப்பாடி! பரபரப்பு காரணம்!

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


தமிழக அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று மணிகண்டன் பதவி பறிக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

மணிகண்டன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை இலாகவை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடுதலாக கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து தமிழக அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமைச்சர் பதவி பறிப்பு ஏன்?

பரமக்குடியில் அமைச்சர் மணிகண்டன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன் அது குறித்து தன்னிடம் முதலமைச்சர் எதுவும் விவாதிக்கவில்லை என்றார்.

கேபிள் டிவி கார்ப்பரேசன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான உங்கள் கட்டுப்பாட்டில் தான் வருகிறது. அப்படி இருக்கையில் உங்களுக்கு தெரியாமல் எப்படி கேபிள் டிவி கட்டணம் குறைப்பு சாத்தியமாகும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எனக்கே தெரியவில்லை முதலமைச்சர் எதுவும் என்னிடம் பேசவில்லை. இனிமேல் பேசுவார் போல அல்லது ஆலோசனை கூட்டம் நடைபெறும் போல என்பது போல் பதில் அளித்தார் மணிகண்டன்.

இதன் பிறகு அமைச்சர் மணிகண்டன் கூறியது தான் அதிர்ச்சி ரகம். கடந்த வாரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுடன் கேபிள் டிவி நிறுவன தலைவர் என்கிற முறையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். அப்போது தனிப்பட்ட முறையில் கேபிள் டிவி வைத்திருக்கும் அனைவரும் தங்கள் கனெக்சனை உடனடியாக அரசு கேபிளுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

இது பல்வேறு ஆப்பரேட்டர்களை கொந்தளிக்க வைத்தது. இது குறித்து அமைச்சர் மணிகண்டன் இன்று பேசினார். அப்போது தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஆப்பரேட்டர்களை அரசு கேபிளில் இணையுமாறு உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதை அப்போது மணிகண்டன் சுட்டிக்காட்டினார்.

உடுமலை ராதாகிருஷ்ணன் அட்சயா கேபிள் விஷன் என்கிற பெயரில் தனியாக கேபிள் நடத்தி வருகிறார். சுமார் 2 லட்சம் கனெக்சன்களையும் அவர் வைத்துள்ளார். கேபிள் டிவி சேர்மன் ஆகியுள்ள உடுமலை ராதாகிருஷ்ணன் முதலில் தனது இணைப்புகளை அரசு இணைப்புக்கு மாற்ற வேண்டும் என்று மணிகண்டன் கூறினார்.

கேபிள் டிவி சேர்மனாக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்ற ஆப்பரேட்டர்களுக்கு முன்மாதிரியாக தனது இணைப்புகளை அரசு கேபிளுக்கு மாற்றினால் மற்ற ஆப்பரேட்டர்களும் மாறுவார்கள் என்று மணிகண்டன் தெரிவித்தார். அரசு செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக பேசியதோடு மட்டும் அல்லாமல் கேபிள் கட்டணம் குறித்து தன்னிடம் விவாதிக்கவில்லை என்று மணிகண்டன் கூறியதால் எடப்பாடி கோபம் அடைந்துள்ளார்.

இந்த கோபத்தின் வெளிப்பாடாகவே மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி தூக்கியுள்ளார் என்கிறார்கள். மேலும் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடுத்த பிரசரும் பதவி நீக்கத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.