ஆ.ராசாவின் அருவருப்பான பேச்சுக்கு ராமதாஸ் கடும் கண்டனம்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களையும் ஒப்பீடு செய்யும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் அருவருக்கத்தக்கவை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது தனிநபர் தாக்குதல்களையே திமுக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. சசிகலாவையும், முதலமைச்சரையும் இழிவுபடுத்தும் வகையில் அருவருக்கத்தக்க ஒரு கருத்தைக் கூறி திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் இந்த பரப்புரையில் இத்தகைய அணுகுமுறையை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ‘‘முதலமைச்சர் தரையில் ஊர்ந்து சென்றவர்’’,

‘‘முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மதிப்பு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அணிந்துள்ள காலணியின் மதிப்பை விட ஒரு ரூபாய் குறைவு’’, ‘‘முந்தா நாள் வரை வெல்லமண்டியில் வேலை செய்து வந்த எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினுக்கு ஈடாக முடியாது’’ என்றெல்லாம் அருவருப்பாக விமர்சித்து வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, அதன் உச்சமாக முதலமைச்சரின் பிறப்பையும், வழிபடத்தக்க வகையில் வாழ்ந்து மறைந்து அவரது தாயார் தவசாயி அம்மாளையும் இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் வரலாற்றிலும், பயணத்திலும் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல. இன்னும் கேட்டால் திமுக தலைவருக்கு மகனாக பிறந்து அக்கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட்ட ஸ்டாலினுடன் ஒப்பிடும் போது, அதிமுகவில் கிளைச் செயலாளராக பணியைத் தொடங்கி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், முதலமைச்சராகவும் முன்னேறியுள்ள பழனிச்சாமி தான் அரசியல் திறன் மிக்கவர்.

இருவரையும் ஒப்பிடுவதற்கு எவ்வளவோ நாகரிகமான வார்த்தைகள் இருக்கும் நிலையில் ஆ.இராசா பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அவரது தரத்தையும், அவர் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றிய தி.மு.க.வின் தரத்தையும் அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் பேசப்பட வேண்டியவை பிரச்சினைகள் தானே தவிர, பிறப்புகள் குறித்த அவதூறுகள் அல்ல. முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லாததால் தான் திமுக இத்தகைய அருவருக்கத்தக்க, ஆபாசமான, இழிவான பரப்புரையை முன்னெடுத்திருப்பதாக தோன்றுகிறது. தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் தான் திமுகவினரை இத்தகைய இழிவான தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட வைக்கிறது. இது அரசியல் நாகரிகமல்ல. யாரெல்லாம் அருவருக்கத்தக்கவர்களோ, இழிவானவர்களோ அவர்கள் தான் இத்தகைய அணுகுமுறையை கடைபிடிப்பார்கள். திமுக இத்தகைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டு கொள்கை பேச வேண்டும்.

அரசியலில் இத்தகைய அணுகுமுறையை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. அந்த வகையில் முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலான இராசாவின் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கடுமையாக கண்டிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.