கலைஞர் இல்லை என்பதால் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கிறார் மோடி! ராகுல் காந்தி ஆவேசம்!

தி.மு.க தலைவர் கலைஞர் இல்லை என்பதால் தமிழகத்தின் கலாச்சாரம் மத்தியில் உள்ள மோடி அரசால் அழிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.


கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்தை ராகுல் காந்தி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: கலைஞர் கருணாநிதி தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர். மக்களுக்காகவே இறுதி வரை வாழ்ந்தவர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை மேம்பட உழைத்தவர் கலைஞர்.

  தி.மு.க தலைவராக பல பத்தாண்டுகள் கலைஞர் இருந்துள்ளார். ஆனால் அவரது வீட்டுக்கு நான் முதல் முறையாக சென்ற போது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் தி.மு.க எனும் மாபெரும் கட்சியின் தலைவராகவும், தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறையும் இருந்தவரின் வீடு அவ்வளவு சிறியதாக இருந்தது. நான் கலைஞரின் வீடு பெரியதாக இருக்கும் என்று நினைத்து போனேன்.

   ஆனால் கலைஞரின் வீடு சாதாரணமாக இருந்தது. அங்கிருந்த பொருட்களும் சாதாரணமாக இருந்தது. உண்மையில் கலைஞரின் எளிமை என்னை ஆச்சரியப்படுத்தியது. வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் கலைஞர்.ஆனால் தற்போது மத்தியில் உள்ள மோடி அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது. தமிழக கலாச்சாரத்தை அழிக்கிறது. இதற்கு காரணம் கலைஞர் இல்லை என்பது தான்.

   தற்போது மு.க.ஸ்டாலின் கலைஞர் இடத்தில் உள்ளார். அவர் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றாக இருந்து மோடி அரசையும், மோடி அரசு இயக்கும் தமிழக அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து உழைக்க வேண்டும்.

   இவ்வாறு ராகுல் காந்தி சிலை திறப்பு விழாவில் பேசினார்.