தேர்தலுக்குப் பயந்து ஓடிப் போனாரா ராகுல் காந்தி..? மோடி போகலாம் ராகுல் போகக்கூடாதா என்று கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திடீரென ராகுல்காந்தி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து, இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று இருக்கிறார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இதில் எப்படியேனும் வெற்றிபெற்று மரியாதையை தக்கவைக்க காங்கிரஸ் விரும்புகிறது. 

இந்த நிலையில் ராகுல் காந்தி, நான்கு நாட்கள் பயணமாக கம்போடியாவுக்குச் சென்றுள்ளார். அங்கு தியான பயிற்சி மையத்தின் முகாமில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இரண்டு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பயந்து வெளிநாடு போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையுடன் இணைக்கக் கூடாது” எனக் கருத்து தெரிவித்துள்ளார். 

நாட்டில் எத்தனை முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் மோடி வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விடுகிறார், ராகுல் ஓய்வெடுக்க போகக்கூடாதா என்று காங்கிரஸ் எதிர்க்கேள்வி எழுப்புகிறது. ஆனாலும், இன்னும் சில மாதங்கள் கட்சி விவகாரங்களில் இருந்து ராகுல்காந்தி ஒதுங்கியிருக்கவே விரும்புகிறாராம். 2021ம் ஆண்டுதான் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது.