அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ரேபரேலியில் போட்டியிடுவது ஸ்மிருதிக்கு பயந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ரேபரேலியில் ராகுல், ஸ்மிருதி ராணிக்குப் பயந்துவிட்டாரா..?
அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ரேபரேலியில் போட்டியிடுவது ஸ்மிருதிக்கு பயந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அவரது தாய்சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா வதேரா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுவரை 17 மக்களவைத் தேர்தலை ரேபரேலி சந்தித்துள்ளது. இதில் 14 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இங்கு 2004 முதல்எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி, தனது உடல்நிலை காரணமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அருகில் உள்ள அமேதி தொகுதி இதுவரை 16 மக்களவைத் தேர்தலை சந்தித்துள்ளது. இதில் 13 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2004 முதல் இங்கிருந்து ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வி அடைந்தார். அதேசமயம், 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல், அங்கு வென்றார். தற்போது மீண்டும் வயநாட்டில் போட்டியிடுகிறார்.
அமேதி, ரேபரேலியில் மீண்டும் காந்தி குடும்பம் போட்டியிடுமா என்ற கேள்வி நீடித்து வந்தது. அமேதியில் ராகுல், ரேபரேலியில் அவரது சகோதரி பிரியங்கா வதேரா போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. பிறகு, அமேதியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா போட்டிடுவார் என்றும் தகவல் வெளியானது.
ராபர்ட் வதேராவும் இங்கு போட்டியிட தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். வேட்புமனு தாக்கலின் இறுதிநாள் வரை நீடித்த சர்ச்சை நேற்று காலை முடிவுக்கு வந்தது. ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் நேற்று அறிவித்தது.
ராகுல் காந்தி மதியம் 2.15 மணிக்கு ரேபரேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். அங்குகாங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் வந்தனர். தொடர்ந்து, சோனியா, கார்கே, பிரியங்கா உள்ளிட்டோர் முன்னிலையில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அமேதியில் கே.எல்.சர்மா... அமேதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிஷோரி லால் சர்மா (63), காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர். முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் சர்மா, லூதியானாவை சேர்ந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவரான ஷீலாகவுலின் உறவினரான இவர்,ராஜீவ் காந்திக்காக 1984-ல் ரேபரேலியில் தேர்தல் பணியை தொடங்கினார். பிறகு கேப்டன் சதீஷ் சர்மாவின் தேர்தல் பிரதிநிதியாகவும் இருந்தார்.
ஸ்மிருதி ராணி போன்ற சாதாரணமான ஒருவருடன் போட்டியிடுவது ராகுலுக்கு சரிப்படாது என்றே அவர் ரேபரேலியை தேர்வு செய்தாராம். கிஷோரியே போதும் ஸ்மிருதியை தோற்கடிக்க என்கிறார்கள். பார்த்துவிடலாம்.