அய்யா மொத்தம் நான்கரை லட்சம் கக்கூஸ்களை காணோம்..! அதிகாரிகளை விழி பிதுங்க வைக்கும் புகார்! ரூ.500 கோடி மாயமான பகீர் நிகழ்வு!

தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் மத்திய பிரதேசத்தில் ரூபாய் 500 கோடி செலவில் கழிவறைகள் அமைக்கப்பட்டதாக கூறி ஊழல் செய்ததாக அதிகாரிகளின் மீது புகார் எழுந்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் பாஜக அரசு தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் நாடெங்கும் தூய்மையாக இருக்கவும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் ஏதுவாக பல திட்டங்களை அரசு அமல்படுத்தியது அந்தத் திட்டத்தில் ஒன்றுதான் ஏழ்மையில் வாடும் குடும்பங்களுக்கு இலவசமாக கழிவறைகளை கட்டித்தரும் செயலாகும்.

இதற்காக மத்திய அரசு சுமார் 540 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் அடிப்படையில் ரூபாய் 540 கோடி செலவு செய்து மக்களுக்காக 4.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக ஆவணங்கள் உள்ளன . ஆனால் அவை அனைத்தையும் தற்போது காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

ஆகவே இந்த கழிவறைகள் கட்டித்தரும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் இதனை குறித்து அம்மாநில அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2012- 2018 ஆம் ஆண்டுகளில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 

இதற்கான புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இதனை பெற்றுக் கொண்ட பயனாளர்களுக்கு தலா ரூ.12,000 வழங்கப்பட்டுள்ளது என சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் கூறுகின்றன. கழிவறைகள் கட்டி தருவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பொழுது தான் இங்கு கணக்கில் காட்டப்பட்ட கழிவறைகள் எவையுமே கட்டப் படவில்லை எனவும் அதில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு குறித்து பழங்குடியின மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. ஏழை எளிய மக்களுக்காக கழிவறை கட்டி தருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியானது வேறு சில காரணங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

அதிகாரிகள் ஆய்வு செய்த பொழுது அரசு பணத்தை கையாடல் செய்ததற்காக ஒருவரை தற்போது கைது செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவரிடம் இருந்து சுமார் ரூபாய் 7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு சுமார் 300 அதிகாரிகளை இந்த ஆய்வை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆய்வின் இறுதியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக பல வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு கூறியிருக்கிறது.