போதையில் ஆண்கள் 4 பேர்! ஒரே ஒரு இளம் பெண்! ஓடும் ரயிலில் ஏசி பெட்டியில் நேர்ந்த விபரீதம்!

கோவையைச் சேர்ந்த பெண்ணிடம் கோவா -மங்களூரு ரயிலில் சில குடிகார நபர்கள் அத்துமீறிய நிலையில் அந்தப் பெண்ணின் புகார் தொடர்பாக ஆர்.பி.எஃப் போலீசார் மெத்தனமாக நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.


3-ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் அந்தப் பெண் பயணம் செய்தார். அப்போது அதே பெட்டியில் சில நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அவர்களில் சிலர் அந்தப் பெண்ணை சைகை காட்டி அருகில் அழைத்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து அந்தப் பெண்  என்ன செய்கிறீர்கள் என கேள்வி எழுப்ப குடிகார நபர்களில் ஒருவன் வேகமாக எழுந்து வந்து என்ன சொன்னாய் என்று கேட்டதாகவும், தான் பிரச்சினையைல் தவிர்ப்பதற்காக தான் எதுவும் சொல்லவில்லை என்று கூறியதாக அந்தப் பெண் தெரிவிக்கிறார்.

அதன் பின்பும் அந்த நபர் தன்னிடம் தகராறு செய்துகொண்டிருந்த நிலையில் தான் டி.டி. ஆரைத் தேடியதாகவும் ஆனால் யாருமே அருகில் இல்லை என்றும் அந்தப் பெண் கூறுகிறார். இதையடுத்து அடுத்து வந்த ரயில் நிலையத்தில் ரயிலை விட்டு இறங்கி பொது கம்பார்ட்மெண்ட்டுக்கு சென்றதாகவும் அங்கிருந்து ரயில்வே பாதுகாப்புப் படையின் பல்வேறு எண்களை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் ஒன்றில் கூட பதில் அளிக்க எவரும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். 

இதையடுத்து தனது நண்பரான பத்திரிகையாளரை தொடர்பு கொண்டு அந்தப் பெண் தெரிவிக்க அவர் அழைத்த போதும் ரயில்வே போலீசால் பலன் இல்லை. இதையடுத்து ரயில்வே அமைச்சகத்தை டேக் செய்து அவர் டிவிட்டர் பதிவிட்டதை அடுத்து அமைச்சக தலையீட்டின் பேரில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ரயில்வே போலீசாருடன் தனது பெட்டிக்கு அந்தப் பெண் சென்ற போது தகராறில் ஈடுபட்ட மர்ம  நபர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் மது அருந்தியிருந்தாலோ, அல்லது அந்தப் பெண்ணிடம் அத்துமீறியிருந்தாலோ மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்து விட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து அந்தப் பெண் தனது டிவிட்டர் பதிவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்ய அந்த நபர்கள் தன்னிடம் அத்துமீறி தான் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் ரயிலில் உள்ள டி.டி.ஆரோ பாதுகாப்புப் படையினரொ எண்ணிக்கை அளவிலான வெட்டி வீணர்கள் என்றும், பெண்களின் பாதுகாப்புக்கு அவர்களால் எந்தப் பலனும் இல்லை என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.