சென்னையில் 23 நாட்களாக வேலை நிறுத்தம் செய்துவரும் அரசு பொதுத்துறை ஊழியர்கள்! இனியாவது அரசு கண்டுகொள்ளுமா?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு. கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என சில நாட்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர், அதன் பிறகு எம்டிஎன்எல் நிறுவனம் அரசிடன் 800 கோடி கோரியிருக்கும் நிலையில்.


மீண்டுமொரு பொதுத்துறை நிறுவனத்தின் ஊழியர்கள் உயர்த்தப்பட்ட தங்களது சம்பள நிலுவைத் தொகையினை வழங்கக் கோரி கடந்த 23வது நாட்களாக அலுவலக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடியில் அமைந்துள்ளது ஆண்ட்ரூ யூல் அண்டு கம்பெனி. இந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம். மின் மாற்றிகள். உயர் அழுத்த மின்சார கோபுரங்கள் போன்றவைகளை உற்பத்தி செய்யும் கட்டுமான பொதுத்துறை நிறுவனமாகும். 

1863 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ யூல் என்ற தொழிலதிபரால் இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம்,1979ம் ஆண்டு திவால் நிலைக்கு சென்றதை அறிந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு. இந்நிறுவனத்தினை மத்திய அரசின் பொதுத்துறை "பி பிரிவு" நிறுவனமாக கையகப்படுத்தி அறிவித்தார்.

தற்போது இந்திய அரசின் பொதுத்துறையின் கீழ்  தொழில்துறை கூட்டு, கனரக தொழில் மற்றும் பொறியியல் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தான் கடந்த 23 நாட்களாக பணி விடுப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

7வது சம்பள கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல. 2017 ஏப்ரல் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை எனவும், கடந்த ஐந்து வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காமல் தாமதப்படுத்துகிறது என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி, 

இந்நிறுவனத்தின் சென்னை ஓஎம்ஆர் சாலையில் பணியாற்றி வரும் 72 தொழிலாளர்களும் கடந்த 23 நாட்களாக பணிக்குச் செல்லாமல் வேலை புறக்கணிப்பு செய்து வருகின்றனர்,

போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்ட சில நாட்களில் நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினிடையே பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜீன் மாதம் 12ம் தேதி நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் நடைபெற்ற 12வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியை தழுவ, தற்போது வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் அதன் ஊழியர்கள்.

இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆன்ட்ரூ யூல் அண்டு கம்பெனி நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர் திரு அப்பனு அவர்கள்,

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்த பணிமனையில் பணிபுரியும் 72 தொழிலாளர்களும் . நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உள்ளத்தோடு நேரகாலம் பார்க்காமல் வேலை செய்து வருகிறோம். அப்படிப்பட்ட எங்களின் அடிப்படை உரிமைகளை கூட போராடித்தான் பெற வேண்டியுள்ளது என வேதனை தெரிவிக்கிறார். 

மேலும் தொழிற்சங்க பொதுச்செயலாளாலனான திரு. கருணாகரன் கூறுகையில். 7வது ஊதிய குழு பரிந்துரைத்த பஞ்சப்படி மற்றும் ஊதிய உயர்வினை கேட்கும் போதெல்லாம். கம்பெனி நிர்வாகத்துடன் இதோ இப்போது பேசுகிறேன். அப்புறமாக பேசுகிறேன் என தட்டிக்கழித்து வருகிறார் துணைப்பொது மேலாளர் திரு.புகழேந்தி அவர்கள்,

மேலும் ஆண்டுக்கு ரூ. 80 கோடி வர்த்தக இலக்குடன் பயணப்படும் இந்நிறுவனம். தனது நிறுவனப் பணியாளர்கள் மீது அக்கறையில்லாமல் செயல்படுகிறது என்றார். மேலும் நிர்வாகம் தொழிலாளிகளுக்கு எதிராக செயல்படுவது இது முதன்முறையல்ல. 2010ம் ஆண்டு ஜனவரி 18 முதல் ஏப்ரல் 5 வரை ஒரு நீண்ட கால போராட்டத்தை நடத்தியே, தங்களது உரிமைகளை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கிறார் இவர்.

இந்த நிலையில், பணியாளர்கள் சட்டவிரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாகவும். இந்த வேலை நிறுத்த நாட்களுக்கு, ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று. அந்நிறுவனத்தின் வாயிலில் துண்டு பிரச்சுரம் ஒன்றை ஒட்டியுள்ளது அந்த நிறுவனம்.

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிற இந்த வேளையில். கிட்டத்தட்ட அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும், தங்கள் வருவாய் இழப்பு காரணமாக தொழிச்சாலைகளின் உற்பத்தியை நிறுத்தி. பணியாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கும் இந்த சூழலில். தொழில் உற்பத்தி திறனிருந்தும். 

7 வது ஊதியக்குழு உத்தரவினை செயல்படுத்தாமல். ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் கடந்த 23 நாட்களாக கம்பெனியின் வாயிலில் போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் இந்நிறுவன ஊழியர்கள்.

அதுமட்டுமின்றி நஷ்டத்தில் இயங்கும் 50 பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில் இந்த நிறுவனமும் உள்ளதாக மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது.

மேலும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா மற்றும் மேற்கண்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடவும் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழு ஆய்வு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

இதுபற்றி மேலும் தகவல் பெற இந்த நிறுவனத்தின் துணை பொது மேலாளர் திரு. புகழேந்தி அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது. 

பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க தனக்கு அனுமதி இல்லை என்றும். தனது மேலதிகாரிகள் அனுமதி பெற்ற பின்னர் தெரிவிப்பதாக சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

இந்தியாவில் ஆட்டோமொபைல். சில்லறை வர்த்தகம். பங்குச் சந்தை, விவசாயம், வங்கிகள், வெளிநாட்டு முதலீடு, உணவு உற்பத்தி என அனைத்து துறைகளும் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இந்த சூழலில். இருக்கின்ற துறையை தக்கவைத்துக்கொள்ள இந்த நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கின்றனர் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும்.

மணியன் கலியமூர்த்தி.