குழந்தைக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கிறதா? தத்துக்கொடுத்து விலைக்கு வாங்கினால் தோஷம் போய்விடும்!

கிரக தோஷங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுவதும் அதனால் அவர்களது உடல்நலம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாவதும் உண்டு.


அப்படிப்பட்ட குழந்தைகளை அதன் பெற்றோர் கோயிலில் தத்து கொடுத்து வாங்குவது என்பது நடைமுறையில் உள்ள வழக்கம். அதுபோன்ற சடங்குகள் அதிகம் நடை பெறும் தலங்களில் ஒன்று புத்தமங்கலம். தோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரும், தத்து எடுப்பவர்களும் இங்கு உள்ள மகா மாரியம்மன் ஆலயம் வருகின்றனர்.

குழந்தையை முறைப்படி அன்னையின் முன்னே பிறருக்கு தத்து கொடுத்து விடுகின்றனர். பின்னர் அக்குழந்தை பிறர் வீட்டு குழந்தையாகிவிடுகிறது. அப்புறம் தவிட்டைக்கொண்டு வந்து குழந்தையை தத்து எடுத்தவரிகளிடம் குழந்தைக்கு விலையாகக் அதைக் கொடுத்து விட்டு பதிலுக்கு குழந்தையை தாங்களே வாங்கி செல்கின்றனர் பெற்றோர். 

சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் பின் அந்த குழந்தை வளர்ந்து நல்ல நிலையை அடைவது நிதர்சனமான உண்மை. இந்த மகா மாரியம்மன் சுற்று வட்டார மக்களின் காவல் தெய்வமாகவும் விளங்குகிறாள். கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் நடுவே கொடிமரம், பலிபீடம் இருக்க இடது புறம் பேச்சியம்மன் திருமேனி உள்ளது.

விசாலமான மகா மண்டபத்தை அடுத்து அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகனும், மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவகிரகங்களும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அன்னை மகா மாரியம்மன் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் புன்னகை தவழ எழுந்தருளியுள்ளாள்.  

குழந்தை பேறு இல்லாதவர்கள் அன்னையிடம் வந்து வேண்டிக் கொள்கின்றனர். பின் ஒரு சிறு மரத்தொட்டில் செய்து அதில் மஞ்சள் துணியைக் கட்டி தலவிருட்சமான வேப்பமரத்தில் அதைக் கட்டிவிட்டுச் செல்ல விரைவில் அவர்கள் தாய்மை அடைவது நிஜம் என்கின்றனர் ஊர்மக்கள். 

அம்மை நோய் கண்டவர்கள் அன்னையின் சன்னிதானத்தில் தண்ணீர் ஊற்றி பிரார்த்தனை செய்கின்றனர். பின் அபிஷேகப் பாலை நோய் கண்டவர்களுக்கு கொண்டுபோய் அருந்த நோயின் கடுமை குறைந்து அவர்கள் குணமாகின்றனர். அங்கங்களில் ஏற்படும் நோய்கள் நீங்க கண், காது, மூக்கு, கை, கால் போன்ற உடல் உறுப்புகளை வெள்ளியில் சிறிய அளவில் செய்து அதை அன்னைக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலம் நோய் முற்றிலும் குணமாவதாக பக்தர்கள் நம்புகின்றனர். 

இந்த ஆலயத்தில் முடிக்கயிறு தருவது மிகவும் பிரசித்தம். அன்னையின் பாதத்தில் வைத்து தரப்படும் முடிக்கயிற்றைக் கட்டிக்கொள்வதால் பயம், பில்லி, சூனியம் ஆகியவை முற்றிலும் அகலும் என்பது நம்பிக்கை. அங்கப் பிரதட்சணம் செய்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்பவர்கள் இங்கு ஏராளம்.

வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த ஐந்தாம் நாள் அன்னைக்கு காப்புக் கட்டி 10 நாட்கள் திருவிழா அமர்க்களமாக நடைபெறுகிறது. பத்தாம் நாள் திருவிழாவில் இங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொள்ளிடக்கரை ஊரான பாப்பாக்குடியிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு காவடி, பறவைக் காவடி, பால் காவடி, பால்குடம் எடுத்து வந்து அன்னை மகா மாரியம்மனை வழிபடுகின்றனர்.

மாலையில் நடைபெறும் தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்குவதும், அதை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவதும் கண்கொள்ளாக்காட்சி. இந்த மகா மாரியம்மனை காவல் தெய்வமாக மட்டுமின்றி தங்கள் அன்னையாகவே பாவித்து இந்த ஊர் மக்கள் அன்பு செலுத்தி வணங்குகின்றனர்.