ஜூலை 31 அத்தி வரதரை பக்தர்கள் பார்க்க முடியாது! ஏன் தெரியுமா?

பல லட்சம் பேர் தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வரும் அத்தி வரதரின் தரிசனம் வரும் ஜூலை 31ம் தேதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பெரும்பாலானோரின் திட்டமிடுதலாக அத்தி வர்தரை தரிசனம் செய்வதாக தான் உள்ளது. தினமும் அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக கூடும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பொதுவாக வார நாட்களில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க குவிவது வழக்கம்.

இந்நிலையில் ஞாயிறு கிழமை விடுமுறை தினமான நேற்று, அத்தி வரதரை தரிசிக்க சுமார் 2 லட்சம் பக்தர்கள் கோயிலுக்குள் குவிந்தனர். திருப்பதி பெருமாளை தரிசிக்க செல்லும் சராசரி பக்தர்களின் கூட்டத்தை விட அத்தி வரதரை தரிசிக்க கூட்டம் அதிகமாக வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அத்தி வரதர் சயன கோலத்திலிருந்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார். நின்ற கோலத்திற்கு பெருமாளை மாற்றுவதற்கான வேலைகள் நடைப்பெற உள்ளதால், 31ம் தேதி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது.

அத்தி வரதரை தமிழக அமைச்சர்கள் பலர் தரிசித்து வரும் நிலையில், பிரதமர் மோடி வரும் ஜூலை 31ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய வர உள்ளார்.

மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வருகின்றனர். 31ம் தேதி சயன கோல அத்தி வரதரை தரிசனம் செய்யும் மோடி, ஆகஸ்ட் 1ம் தேதி நின்ற நிலை வரதரை தரிசித்து விட்டு திரும்ப திட்டமிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஜூலை 31, ஆக்ஸ்ட் 1ம் தேதி பக்தர்கள் தரிசனம் செய்ய சற்று சிக்கல் ஏற்படும் என தெரிகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31ம் தேதி அத்தி வரதரை தரிசனம் செய்ய பிரதமர் மோடி வருகை தருவதால் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.