தி.மு.கவுடன் கூட்டணி! மதுரையில் அச்சாரம் போட்டு விட்டு சென்ற மோடி!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து மதுரை வந்த மோடி, தி.மு.கவிற்கு நேர்த்தியாக வலை விரித்துவிட்டு சென்றுள்ளார்.


கடந்த இரண்டு மாத காலமாகவே மோடியை மிக கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார் மு.க.ஸ்டாலின். தேசிய அரசியலில் தீவிரமாக இருக்க கூடிய அதே சமயம் மோடியை மிக கடுமையாக எதிர்க்க கூடிய மம்தா, மாயாவதி, ஏன் ராகுல் காந்தி கூட விமர்சிக்க தயங்கும் விஷயத்தில் ஸ்டாலின் தடாலடியாக விமர்சித்து வருகிறார்.

 

   இதனால் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க – பா.ஜ.க நிர்வாகிகள் எலியும் பூனையுமாக இருந்து வருகிறார்கள்.   இந்த நிலையில் மதுரைக்கு வந்த மோடி தி.மு.கவிற்கு எதிராகவோ, ஸ்டான் குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சொல்லப்போனால் மதுரை வந்த மோடி தனது அரசின் சாதனைகள் என்று கூறி சில விஷயங்களை மட்டும் பேசிவிட்டு சென்றுவிட்டார்.

 

   அதாவது மதுரையில் அரசியல் பேசுவதை மோடி முற்றிலுமாக தவிர்த்துவிட்டார். இதற்கு காரணம் தமிழக அரசியல் சூழல் என்கிறார்கள். அதாவது தமிழகத்தை பொறுத்தவரை கருத்து கணிப்புகளின் அடிப்படையில் தி.மு.க கூட்டணி தான் முன்னிலையில் உள்ளது. எனவே தி.மு.கவுடன் கூட்டணி வைத்தால் கணிசமான எண்ணிக்கையில் பா.ஜ.க வெல்ல முடியும் என்று மேலிடம் நினைக்கிறது.

 

   ஆனால் தி.மு.கவோ நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி என்கிற முடிவை திட்டவட்டமாக எடுத்துவிட்டது. அதே சமயம் தேர்தல் முடிந்த பிறகு தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க போவது பா.ஜ.க தான் என்றும் அந்த கட்சியின் மேலிடம் தின்மமாக நம்புகிறது. எனவே  பெரும்பான்மைக்கு கூடுதல் இடங்கள் தேவைப்படும் பட்சத்தில் தி.மு.க போன்ற கட்சிகளின் தயவு தேவை என்று பா.ஜ.க கணக்கு போடுகிறது.

 

   அதாவது தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை என்றாலும் கூட தேர்தலுக்கு பிறகு தி.மு.க ஆதரவை பெற வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் பா.ஜ.க உள்ளது. தேர்தலுக்கு முன்பு என்னதான் தன்னை விமர்சித்தாலும் ஆட்சி அமைக்கப்போவது பா.ஜ.க தான் என்று தெரிந்தால் மத்திய அமைச்சர் பதவியை கேட்டு தி.மு.க ஓடி வந்துவிடும் என்றும் மோடி கருதுகிறார்.

 

  எனவே தான் தி.மு.கவையோ, ஸ்டாலினையோ தற்போது விமர்சித்தால் பிறகு ஆதரவு கேட்கும் போது தர்மசங்கடமான நிலை ஏற்படும் என்று மோடி நினைக்கிறார். அதனால் தான் மதுரை வந்த மோடி தி.மு.க குறித்தோ ஸ்டாலின் குறித்தோ வாய் திறக்கவில்லை. அதே சமயம் அண்டை மாநிலமான கேரளா சென்ற மோடி, அங்கு ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியை விளாசியுள்ளார்.

 

   மேலும் கேரளாவில் பேசும் போது வார்த்தைக்கு வார்த்தை மோடி பேச்சில் அரசியல் நெடி தூள் கிளப்பியது. ஆனால் தமிழகத்தில் மட்டும் மோடியின் பேச்சு உப்பு சப்பில்லாமல் போயுள்ளது.