ரூ.94 கோடி! வருமான வரித்துறை அதிகாரிகளை மலைக்கச் செய்த பழனி பஞ்சாமிர்த கடைகள்!

பிரசாதம் விற்கப்படும் கடைகளில் வரி ஏய்ப்பின் மூலம் 93.56 கோடி ரூபாய் வருமானம் பெற்ற சம்பவமானது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள பிரசாத கடைகளில் கணக்கில் வராத நகைகளும், பணமும் இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

வருமான வரித்துறையினர் மறைமுகமாக நடத்திய விசாரணையில் "சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ்" ஆகிய பிரசாத கடைகளில் எந்தவித ரசீதுமின்றி பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கண்டறிந்தனர். 

5 நாட்களாக இந்த கடைகளுக்கு சொந்தமான வீடுகள், பண்ணைகள், அருகில் உள்ள பிற கடைகள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இதில் பல்வேறு கோணங்களில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதாவது நிறுவனத்தின் மொத்த வருமானமாக வெறும் 40 ஆயிரம் முதல் 10 லட்சம் வரையே ஆதாரங்களுடன் உள்ளன. அதன்படியே அவர்கள் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

ஆனால் கணக்கில் வராத 93 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த பணம் ஒவ்வொரு வருடத்திலும் வரிஏய்ப்பின் மூலம் கிடைக்க பெற்றதாகவும் கூறப்படுகிறது. ரொகக்கமாக 2 கோடியே 20 லட்சம் ரூபாயும், 56 கிலோ 600 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் சேகரித்துள்ளனர். 2 நிறுவனங்களின் தலைவர்களுக்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழைப்பழம், கல்கண்டு ஆகியவற்றை கொள்முதல் செய்த நிறுவனங்களிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.