சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் சடலமாக இருந்த பயிற்சி மருத்துவர் பிரதீபாவின் மரணத்தில் புதிய திருப்பமாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து டூட்டி..! காலில் வீக்கம்..! தந்தையிடம் இரவு இளம் பெண் டாக்டர் கூறியது என்ன? மர்ம மரண வழக்கில் புதிய திருப்பம்!
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் பிரதீபா. இவர் பயிற்சி மருத்துவராக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரசவ வார்டில் பணியாற்றி வந்தார். ஊரடங்கு காரணமாக மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்த பயிற்சி மருத்துவர் பிரதீபா கடந்த ஒன்றாம் தேதி பூட்டிய அறைக்குள் சடலமாக கிடந்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதிபாவின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என போலீசாரும் அவரது பெற்றோரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் பிரதிபாவின் அப்பா ரமேஷ் என்பவர் போலீசாரிடம் அளித்த புகாரில் சில தகவல்களை கூறியுள்ளார். கடந்த மாதம் மார்ச் 20ம் தேதி பிரதீபா மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பினார். அதன்பிறகு அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அதன் பின்னர் ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு பிறகுதான் அவர் பயிற்சி மருத்துவராக பணியை தொடங்கினார். செல்போனில் என்னிடம் பேசும்போது எனது மகள் வேலைப்பளு காரணமாக சரியாக சாப்பிட முடியவில்லை என்றும் சில நாட்கள் சாப்பிடாமல் இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும் ஏப்ரல் 30-ம் தேதி இரவு என்னிடம் பேசும்போது எனது மகள் தனது காலில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார். இதை அறிந்த பிரதிபாவின் அம்மா தனது மகளை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். பின்னர் மே மாதம் 1ம் தேதி பிரதீபா சுயநினைவு இல்லாமல் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது எனவும் அவர் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
சந்தேகத்தின் காரணமாக பிரதீபாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று முடிவுகள் வெளியாகியது. விரிவான பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே பிரதீபாவின் மரணத்தில் உள்ள மர்மம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.