கேரள லாட்டரியில் ரூ.5 கோடி! ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆன ஏழைத் தமிழன்!

கேரளா மாநிலத்தில் வாழ்ந்து வரும் ஏழ்மையான தமிழக தம்பதியினர் ஒருவருக்கு லாட்டரி சீட்டின் மூலம் 5 கோடி பரிசு விழுந்திருப்பது அந்த குடும்பத்தினரை ஈடுசெய்ய முடியாத இன்பத்தில் திளைத்து வருகின்றனர்.


கோட்டை கருங்குளம் என்னும் பகுதி நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இங்கு பிறந்தவர் செல்லையா. இவருடைய வயது 50. இவருக்கு சுமதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக கேரள மாநிலத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

கேரளா மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள மூவாற்றுப்புழா என்ற கிராமத்தில் வசித்து வந்தார். மேலும் எதிர்பார்த்த வகையில் தொழில் கிடைக்காததால் குடும்பம் வறுமையில் வாட தொடங்கியது. பின்னர் அரசு அங்கீகாரம் பெற்ற லாட்டரி சீட்டுகளை நடந்தே சென்று விற்று வந்து பிழைப்பை ஒட்டிக்கொண்டிருந்தார்.

மேலும் அரசு வழங்கிய காருண்யா பாக்கியஸ்ரீ என்னும் லாட்டரி சீட்டுகளையும் விற்றுக் கொண்டிருந்தார். 4 சீட்டுகள் மட்டுமே விற்காமல் இருந்தன. எவ்வளவு மன்றாடி பார்த்தும் அவற்றை விற்க முடியவில்லை. இதனால் விரக்தியில் அவற்றை அவர் வீட்டிற்கு எடுத்து சென்றார். மறுநாள் காலையில் அவருக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் வீட்டில் இருந்த லாட்டரி சீட்டுகளில் ஒன்றிற்கு 5 கோடி பரிசு விழுந்திருந்தது. உடனே நம்ப முடியாத அளவிற்கு இன்பத்தில் திளைத்தார். லாட்டரி மையத்திற்கு சென்று அந்த பரிசை உறுதி செய்துகொண்டார். பின்னர் அவரிடம் கேட்டபோது, அவர் தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க போவதாகவும் தன் சொந்த ஊரில் ஒரு வீட்டினை கட்ட போவதாகவும் கூறினார்.