தனுஷின் பட்டாஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது? ஒரு பரபர விமர்சனம்!

அசுரன் எனும் மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்ததாக அமைந்துள்ளதா என்பது இந்த விமர்சனம்.


பட்டாஸ் படத்தில் இரண்டு தனுஷ். ஒருவர் மகன். மற்றொருவர் தந்தை. தந்தை தனுஷ் கொல்லப்படுகிறார். இது தெரியாமல் இருக்கும் தனுஷ் ஒரு கட்டத்தில் தெரிந்து கொண்டு எப்படி தந்தையை கொன்றவர்களை பழி தீர்க்கிறார் என்பது தான் கதை. கேட்கும் போதே அருத பழைய கதை என்பது தெரிய வருகிறது.

ஆனால் தனுஷ் மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் படத்தில் சின்ன சின்ன மேஜிக் செய்து ஒரு தரமான மசாலா படத்தை கொடுத்துள்ளார்கள். படத்தின் கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் திரைக்கதையில் தான் இயக்குனர் தனது திறமையை காட்ட வேண்டும். அந்த வகையில் இயக்குனர் ஓரளவிற்கு பட்டாஸில் தனது திறமையை காட்டியிருக்கிறார்.

இதனால் படத்தின் முதல் பாதி போர் அடிக்காமல் செல்கிறது. இரண்டாவது பாதியில் அடிமுறை எனும் தமிழனின் பண்டைய கால தற்காப்பு கலையை வைத்து கதை சொல்லியிருப்பதால் விறுவிறுப்பு ஏற்படுகிறது. ஹீரோ - வில்லன்- நாயகி - சென்டிமெண்ட் என அனைத்துமே நாம் பல படங்களில் பார்த்தது தான்.

ஆனால் இந்த படத்தில் கதாபாத்திரங்களை மெருகேற்றி பட்டாஸ் படத்தை நம்மை பார்க்க வைத்துள்ளார்கள். தனுஷ் - ஸ்னேகா கெமிஸ்ட்ரி இந்த படத்திலும் ஹிட். மகன் தனுசுக்கு ஜோடியாக வரும் மெஹ்ரீனுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. தனுஷ் உடன் புதிதாக இணைந்துள்ள காமெடி நடிகர் சதீஷ் யார் இவர் என்று நம்மை கவனிக்க வைக்கிறார்.

சண்டை காட்சிகளில் அதகளப்படுத்தியுள்ளார் தனுஷ். பாடல்களும் தெறிக்கவிடுகிறது. பொங்கலுக்கு ஒரு நல்ல மசாலா படம் என்றால் இரண்டு இருக்கிறது. ஆம் தர்பார் பார்த்தவர்கள் பட்டாஸ் பார்க்கலாம். பட்டாஸ் பார்த்தவர்கள் தர்பார் பார்க்கலாம்.