எம்.பி தேர்தல் தேதி திடீர் அறிவிப்பு! எப்ப தெரியுமா?

தேர்தல்


மார்ச் மாதத்தில், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம், என்று தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டில் பதவியேற்ற மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசின் பதவிக்காலம், இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த சூழலில், மக்களவைக்கு புதிய தேர்தல் நடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. 

2018 டிசம்பரிலேயே மக்களவை தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக, பல்வேறு வதந்திகள் நாளுக்கு நாள்
வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், வதந்திகளை மறுத்துள்ள தேர்தல் ஆணைய வட்டாரங்கள், மார்ச் முதல் வாரத்தில், மக்களவை தேர்தல் தேதி பற்றிய விவரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கின்றன. 

பாதுகாப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில், மக்களவை தேர்தல் அட்டவணை வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும், மக்களவை தேர்தலுடன் சேர்த்தே நடத்தப்பட உள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. 

இதற்கு முன், 2014ல் மார்ச் 5ம் தேதி மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல், மார்ச் என 2 மாதங்களாக, 9 கட்டங்களாக, வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 

அதேசமயம், ஜம்மு காஷ்மீர் மாநில அரசு கலைக்கப்பட்ட நிலையில், அம்மாநில சட்டப்பேரவைக்கு, இன்னும் 6 மாதம் கழித்தே தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஏனெனில், அங்கு நிலவும் பாதுகாப்பு சூழல்களின் அடிப்படையில், பிரத்யேக பலத்த பாதுகாப்புடன் அம்மாநிலத்தில் தனியாக சட்டப்பேரவை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை பதவிக்காலம் உள்ள நிலையில், 2018, நவம்பரில் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.