பாமா - ருக்மணி கதையும்! பவழமல்லி தானாகவே உதிரும் அதிசயமும்! ஏன் தெரியுமா?

ஒருமுறை தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த பாரிஜாத மலரைக் கிருஷ்ணரிடம் கொடுத்தார்


ஸ்ரீகிருஷ்ணனோ பாமாவிடம் கொடுத்துவிட்டார். இதைக் கண்ட நாரதர் உடனே ருக்மணியிடம் போய் விஷயத்தை சொல்லி விட்டார். உடனே ருக்மிணி கோபமுற்றாள். தன் தோழியின் மூலம் ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து வரச் செய்து அவரிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தினாள். கிருஷ்ணன் அவளை சமாதானப் படுத்தினார் என்றாலும் அவள் சமாதானம் அடையவில்லை. தனக்கு பாரிஜாத மரமே வேண்டும் என்றாள்.

அவள் வேண்டுகோளை நிறைவேற்ற எண்ணிய கிருஷ்ணர் இந்திரனுடன் போரிட்டு பாரிஜாத மரத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்து ருக்மணியின் வீட்டில் ஊன்றினார் இதனால் ருக்மணி கோபம் நீங்கி சமாதானம் அடைந்தாள். ஆனால் அந்த மரத்தில் பூத்த பூக்கள் அனைத்தும் பாமாவின் வீட்டில் விழுந்தது. ருக்மணிக்கு ஒரு பூ கூட கிடைக்காமல் போனது. ஏனென்றால் ருக்மிணி கேட்டது பாரிஜாத மரத்தைத்தான், பூவையல்ல

இன்றும் கூட பாரிஜாதம் என்ற பவழமல்லிப்பூ தானாக உதிர்வது இதனால்தான் என்கிறார்கள் பெரியோர்கள்.

இதற்கு மற்றொரு கதையும் உண்டு.

அந்தக் காலத்தில் பவளமல்லிகா என்றொரு தேவதை இருந்தாளாம். அந்த தேவதைக்கு சூரியன் மீது அப்படியொரு காதலாம்.. சூரியனுக்காக எதையும் செய்வேனென்ற ரீதியில் பைத்தியமாய் இருந்த பவளமல்லிகா, கடைசியில் தன் காதலை சூரியனிடம் சொன்னாளாம். சூரியனோ.. என்னால் உன்னைக் காதலிக்க முடியாது. உன்னை ஏற்க முடியாது என்று சொன்னானாம்..

இதனால் மனம் வருந்திய பவள மல்லிகா.. சூரியனுடன் கடும் கோபம் கொண்டு, இனிமேல் நீயிருக்கும் திசைக்கே வரமாட்டேன். என் தூய்மையான காதலை நீ தூக்கியெறிந்து விட்டாய். இனி என்றும் உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, காதல் தோல்வி தாங்காமல், பாரிஜாத பூவாய் உருமாறினாளாம்.

அதனால் தான் இன்றும் பவளமல்லியெனும் பாரிஜாதம் இரவில் நிலவொளியில் இதழ்விரித்து நறுமணம் பரப்பி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, சூரியன் உதிக்குமுன்னமே, தனது கண்ணீரை பூக்களாய் சொரிந்து, உதிர்ந்து பூமியில் விழுந்து விடுகிறதாம்..