ஒரே நாளில் 178 தொழிலாளர்களின் வயிற்றில் அடித்த விகடனுக்கு அறம் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது ?

ஒரே நாளில் 178 தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கிய விகடனுக்கு அறம் குறித்து பேசவோ, எழுதவோ என்ன தகுதி இருக்கிறது என்று நிவேதிதா லூயிஸ் எழுதியுள்ள பதிவு வைரல் ஆகி வருகிறது.


ஒரே நாளில் 178 பேரை பணியிலிருந்து நீக்கியிருக்கிறது விகடன் குழுமம். மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இது. பணி நீக்கத்துக்கான காரணமாக அவர்களிடம் சொல்லப்பட்டது, அலுவலகத்தின் “ரைட் சைசிங்”. அதாவது லாபகரமாக இயங்கவேண்டும் என்றால் தயவு தாட்சண்யமின்றி ஆட்குறைப்பு செய்ய வேண்டும்! இதை பெருமையாக மேடை போட்டு பிற ஊடக நிறுவன முதலாளிகளுக்கும் எட்டும் வண்ணம் சொல்லியே செய்திருக்கிறார் குழும முதலாளி. 

மீண்டும் மீண்டும் ‘முதலாளி’ என்று நான் சொல்வதன் காரணம், ஊழியர்களை சக மனிதர்களாகக் கூட மதிக்காத, லாபம் தரும் இயந்திரங்களாகப் பார்க்கும் அப்பட்ட ஃபாசிச மனநிலைக்கு வேறு பெயரில்லை என்பதால்! சி.ஈ.ஓ என்ற பதவி பெயர் சொல்லவேண்டும் என்றால், நிறுவனத்தை, தன் ஊழியர்களை நேர்மையாகக் கொண்டு செலுத்தும் “அறம்” வேண்டும். அதை முழுக்க இழந்துவிட்ட நிறுவனத்தை வேறென்ன சொல்ல?

94 ஆண்டுகள் எஸ்.எஸ். வாசன் என்ற தேர்ந்த சி.ஈ.ஓ.வும், அவர் மகன் பாலசுப்ரமணியன் என்ற திறமையான சி.ஈ.ஓ.வும் கார்ப்பரேட் உலகின் வாசம் வீசும் முன்பே, விகடன் நிறுவனத்தை தூசியிலிருந்து வளர்த்து எடுத்தார்கள். அதை மீண்டும் மண்ணுக்குள் அனுப்பும் வேலையை தற்போதைய நிர்வாகம் தெளிவாகச் செய்துவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தடுமாற்றத்துடன் ஓடிவந்த விகடன் வண்டியை நேர் செய்து தூக்கி நிறுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி, உலகே பொருளாதார சிக்கலில் தவிக்கும் போது, ‘ஓப்பன் ஆஃபீஸ் சிஸ்டம்’ என்ற சிஸ்டத்தை அமுல்படுத்த, பிரம்மாண்ட கண்ணாடிக் கட்டிடத்தைக் கட்டியதில் தொடங்கி நிர்வாகம் செய்தது எல்லாமே மிஸ்மேனேஜ்மென்ட்! 

இந்த ஓப்பன் ஆபீஸ் நடைமுறையே பெறும் கோளாறு, தோல்வி என்று உலகம் முழுக்க உள்ள பெருநிறுவனங்கள் தூக்கி வீசிய பின் அதைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறது நிர்வாகம். ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி மனிதரில் போட்டு என்று எதிலாவது லாபம் பெரிதாக வந்துவிடாதா என்ற பேராசையில், கையில் இருப்பதைக் கோட்டை விட்டிருக்கிறார்கள். 

விகடனில் வேலை செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு இன்றும் வாழும் கல்லூரி மாணவர்கள் உண்டு. மாணவ நிருபர் திட்டம் மூலம் விகடனில் நுழைந்தவர்கள் பலர் இன்று அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகளாக வலம் வருகிறார்கள். அது அந்நாளைய விகடன் சமூகத்துக்குச் செய்த எந்த எதிர்பார்ப்புமில்லாத பெரும் கடன். அது போலவே இன்று ஊடகத்துறையில் இருக்கும் 50 வயதைத் தாண்டிய பலரும் விகடன் பள்ளியின் முன்னாள் மாணவர்களே. மாநிலத்தின் தமிழ் மொழி ஊடகங்களில் இன்று மிக உயர் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் விகடனில் நுழைந்து மேலே ஏறியவர்கள் தான். இன்று தமிழகம் நமக்குத்தரும் செய்திகளில் பல விகடனில் செதுக்கப்பட்டவை; விகடனின் பாணியில் நமக்குச் சொல்லப்படுபவை. 

விகடனில் பணியாற்றுபவர்கள் பலரை நேரில் கண்டும், பேசியும், பார்த்தும் இருக்கிறேன். அவர்களில் பலருக்கு பெருமிதமும், தங்கள் நிறுவனம் மேல் அளப்பரிய அன்பும், நன்றி உணர்வும் உண்டு. சிறந்த திறமையாளர்களை அடையாளம் கண்டுகொண்டு, முன் செலுத்துவதில் வாசனும், அவர் மகன் பாலசுப்ரமணியனும் கை தேர்ந்தவர்கள். அதே போல தங்களுக்குக் கிடைத்த வைரங்களைப் பட்டை தீட்டி மிகச் சரியாக பயன்படுத்தியும் இருக்கிறார்கள். கல்லூரி முடித்து நேரே விகடனில் நுழைந்து பணி ஓய்வு பெற்றுச் சென்றவர்கள் தான் இங்கு அதிகம். அப்படியான பாரம்பரியத்தில் வந்திருக்கும் முதலாளி, இப்போது லாபம் குறைகிறது என்று காரணம் காட்டி வேறெந்த முகாந்திரமும் இல்லாமல், ஒரே நாளில் 178 நம்பிக்கையான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். 

விகடனின் பெரும் லாபம் அதன் அச்சு ஊடகம் வழி தான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கும் நிர்வாகம், விளம்பரங்கள் குறைந்து போனதைக் காரணம் காட்டி இந்த ஆட்குறைப்பைச் செய்திருக்கிறது. 94 ஆண்டுகளாக, இரண்டாம் உலகப் போர், பாகிஸ்தான் போர், பஞ்சங்கள், பசி, பட்டினி எல்லாம் தாண்டி நிமிர்ந்து நின்ற நிறுவனம், இரண்டே மாதங்கள் விளம்பரம் குறைந்து போனதைக் காரணம் காட்டி இத்தனை பேரை ஒரே நேரத்தில் வீட்டுக்கு அனுப்புவது என்றால், தவறு யாரிடம்? 94 ஆண்டுகளாக சம்பாதித்த லாபம் எங்கே? யாருக்குத் தரப்பட்டது? இன்று வீட்டுக்குள் முடங்கியிருக்கும் 178 பேரிடமா? இதில் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்தபட்சம் 30% சம்பள வெட்டையும் இந்த ஊழியர்கள் தாங்கி இருக்கிறார்கள். முழு ஊதியமும் தராமல் தான் இப்போது அவர்களை வெளியேற்றும் படலம் அரங்கேறி வருகிறது.

 அச்சு ஊடகம் நலிந்து வந்த நிலையில் நாணயம், பசுமை, மோட்டார், மணமகள், கிச்சன், சக்தி என்று வரிசையாக புதுப்புது ஜானர் இதழ்களை இறக்கியபோது இல்லாத நட்டம், இப்போது எப்படி வந்தது? அல்லது இத்தனை ஆண்டு கால நட்டத்தை கொரோனா என்ற பெயரற்ற, பிம்பமற்ற ஒன்றின் மேல் சுமத்தி நிர்வாகம் தன் தவறுகளை சரிசெய்ய முயல்கிறதா? இது அறமா? சிந்தியுங்கள்.

ஆனால் பாருங்கள், விகடன் தான் ஊடக அறம் பற்றி பத்தி பத்தியாக எழுதும், எங்கே அநியாயம் நடந்தாலும் ஜூ.வியும், ஆ.வியும் ஆவியைப் பிடித்துக்கொண்டு போராடும். அப்படி என்றால் இந்த அறம் ஆட்டுக்குட்டி எல்லாம் ஊருக்கு உபதேசம் சொல்வதற்கு மட்டும் தானா? 

40 முதல் 55 வயதான ஊழியர்களை ஒரே நாளில் காரணமின்றி நீக்குவது அவர்களை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதை உணர்ந்திருக்கிறதா நிர்வாகம்? திருமண வயதில் மகள்கள், இந்தப் பணியை மட்டுமே நம்பிய குடும்பங்கள் என்று எல்லாமும் தெருவில் நிற்க, நிர்வாகத் திறமைக் குறைபாடன்றி வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்? ‘டெர்மினேஷன் நோட்டீசு’ தராமல், ஊழியர்கள் தாங்களே முன்வந்து பணியை ராஜினாமா செய்வதாக எழுதித்தருமாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டத்தின் ஓட்டைகளை எப்படி அழகாக அடைக்கிறார்கள் பாருங்கள். 

இந்த 178 பேரும் எங்கு சென்று இனி வேலை தேடி, எப்படி வாழ்வது? ‘காஸ்ட் கட்டிங்’ செய்ய வேண்டுமென்றால் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற ஆபத்தான போக்கை நிர்வாகம் கையில் எடுத்திருக்கிறது. பிற ஊடக நிறுவனங்களுக்கும் “ரைட் சைசிங் செய்ய வேண்டும், அதில் உங்கள் மிகத்திறமையான ஊழியர் வெளியேற நேர்ந்தாலும், நிறுவனத்துக்காக நீங்கள் இதைச் செய்ய வேண்டும்”, என்று வழி காட்டியிருக்கிறது விகடன் நிர்வாகம். ஊடகத் துறையில் ஆரம்பித்திருக்கும் சங்கிலித்தொடர் வேலையிழப்பு இது. இது தொடரும். 

ஏற்கனவே பொருளாதார மந்த நிலையை மத்திய அரசு கொரோனா தான் காரணம் என்று அதன் தலையில் கேஸ் எழுதிக் கொண்டிருக்கிறது. தங்கள் சுயநலத் தவறுகளுக்கு, பேராசைக்கு, அப்பாவி ஊழியர்களின் சீட்டைக் கிழித்து கண்மூடித்தனமான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள் பெருமுதலைகள். விகடனின் இந்த ஃபாசிச நடவடிக்கைக்கு என் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்கிறேன். ஒரு பேரிடர் காலத்தில் ஊழியர்களைக் கைவிட்டதை காலம், எக்காலமும் மன்னிக்காது! “அறம்” என்ற ஒற்றைச் சொல்லை இனி பயன்படுத்தும் முன், நிர்வாகமே, உங்களால் தெருவில் நிற்கும் 178 குடும்பங்களுக்கு தர உங்களிடம் பதில் இருக்கிறதா? இந்த “அறப்பேச்சைப்” பேச இனி விகடனுக்கு யாதொரு தகுதியும் இல்லை. This is utter fascism on full display. எழுதியவர் : Nivedita Louis