உல்லாச உலகம் எனக்கே சொந்தம்..! பெண் சிஷ்யைகளுடன் ஹைத்தி தீவுக்கு பறந்த நித்தி!

ஈக்வடார் நாட்டிற்கு உட்பட்ட பகுதியில் நித்தியானந்தா பதுங்கியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அதனை தற்போது அந்நாடு மறுத்துள்ளது.


முன்னாள் பெண் சீடர் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு பெங்களுர் நீதிமன்றம் நித்தியானந்தா மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. இதனை அடுத்து நித்தியானந்தாவிற்கு எதிரான வழக்கின் விசாரணையும் தொடங்கியது. அப்போதே நித்தியானந்தா தலைமறைவானார். 

இந்த நிலையில் குஜராத் ஆசிரமத்தில் சிறுமிகளை கடத்தி வைத்திருப்பதாக எழுந்த புகாரில் நித்யானந்தா மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தனக்கு சொந்தமான தீவுக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. அத்துடன் நித்தியானந்தா அந்த தீவை கைலாச நாடு என்று அறிவித்துக் கொண்டார்.

தனிக்கொடி, தனி அமைச்சரவை என இந்திய அரசுக்கு சவால் விடும் விதத்தில் நித்தியானந்தா செயல்பட்டு வந்தார். நித்தி, தனித் தீவை விலைக்கு வாங்கவும் தனி நாடு அமைக்கவும் ஈக்வடார் நாடு உதவுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நித்தியானந்தா ஈக்வடாருக்கு வந்ததாகவும் அத்துடன் அகதியாக தனக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கோரியதாகவும் அந்நாட்டு தூதரகம் கூறியுள்ளது. ஆனால் நித்தியானந்தாவிற்கு அகதி எனும் அந்தஸ்தை கொடுக்க தாங்கள் மறுத்துவிட்டதாக ஈக்வடார் கூறியுள்ளது. மேலும் நித்தி, தனியாக தீவு வாங்கவும், புதிய நாடு அமைக்கவும் தாங்கள் உதவவில்லை என்றும் தற்போது நித்யானந்தா ஈக்வடாரில் இல்லை என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அகதியாக ஏற்க ஈக்வடார் மறுத்ததை தொடர்ந்து நித்தியானந்தா அருகாமையில் உள்ள ஹைத்தி நாட்டிற்கு தன்னுடைய பெண் சிஷ்யைகளுடன் பறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழ்மையில் உழன்று வரும் அந்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை கவனிக்க வேண்டிய முறையில் கவனித்து நித்தி அங்கு தஞ்சம் அடைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

முழுக்க தண்ணீரால் சூழப்பட்டுள்ள அந்நாட்டில் ஏராளமான வனப்பகுதிகள் உள்ளன. அங்கு நித்தியானந்தா தற்காலிகமாக தனது ஆசிரமத்தை அமைத்திருக்கலாம் என்கிறார்கள்.