விசாரணைக்கு ஆஜரான போது நிர்மலாதேவி மயங்கி விழுந்த சம்பவமானது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயங்கி சரிந்த நிர்மலா தேவி! 108 ஆம்புலன்ஸ் விரைந்தது! நீதிமன்றத்தில் பரபர சம்பவம்!

2 வருடங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்து சென்றதற்காக, நிர்மலாதேவி என்ற கல்லூரி பேராசிரியை கைது செய்யப்பட்டார். இவரை விசாரித்தபோது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சம்பந்தப்பட்டிருப்பதாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் குறிப்பிட்ட தினங்களில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டிருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நிர்மலாதேவி, உதவி பேராசிரியரான முருகன், ஆராய்ச்சி மாணவரான கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜராகினர். நீதிபதி விசாரணையில் தொடங்க உத்தரவு விடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் நிர்மலாதேவி திடீரென்று மயங்கி விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் நிர்மலாதேவியின் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப முயன்றனர். பெண் காவல்துறை அதிகாரிகள் அவருடைய கைகளை தேய்த்து அவரை பழைய நிலைக்கு கொண்டு வர முயன்றனர்.
பின்னர் நீதிபதி அவர்கள் 3 பேரையும் 23-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸில் நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவமானது நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.