ஜனவரி 22! காலை 7 மணி! தூக்கில் தொங்கவிடப்படும் நிர்பயா குற்றவாளிகள்! நாள் குறித்த நீதிமன்றம்! பரபர தகவல்!

நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த நான்கு பேரை வரும் ஜனவரி 22ந் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் தொங்க விட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நண்பருடன் வெளியே சென்றுவிட்டு திரும்பிய நிர்பயாவிற்கு பேருந்து ஒன்று லிப்ட் கொடுத்தது. அதில் ஏறிய நிர்பயாவை பேருந்தில் இருந்த டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு பேருமே குற்றவாளிகன் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஒரே ஒருவன் மட்டும் சிறுவன் என்பதால் 3 ஆண்டுகளில் தண்டனை முடிந்து அவன் விடுதலை பெற்றான்.

மற்ற ஐந்து பேரும் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்ற நான்கு பேரும் அனுப்பிய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இந்த நிலையில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பயாவின் தாயார் நீதிமன்றம் சென்றார்.

நிர்பயா தாயார் மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் வரும் ஜனவரி 22ந் தேதி புதன்கிழமை அன்று காலை 7 மணிக்கு தூக்கில் ஏற்ற உத்தரவு பிறப்பித்தது. அத்தோடு அந்த நான்கு பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான வாரண்டை பிறப்பித்தார் நீதிபதி. இந்த வாரண்ட் திகார் சிறைக்கு சென்ற பிறகு அவர்களை தூக்கில் ஏற்றுவதற்கான பணிகள் தொடங்கும்.

கடந்த 2012ம் ஆண்டு நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தின் குற்றவாளிகள் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கில் ஏற்றப்பட உள்ளனர். நான்கு பேரும் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கவிடப்படுகின்றனர். சுதந்திர இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.