ரூ.2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்! புதிதாக மீண்டும் வருகிறது ரூ.1000 நோட்டு?

மத்திய அரசு புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட போவதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். 500, 1000 ரூபாய் நோட்டுகளை அதிரடியாக நீக்கம் செய்தபின் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சற்று குறைவாக இருக்கிறது. ஆகையால் ஏடிஎம் இயந்திரத்தில் கூட நம்மால் 2,000 தாள்களை பார்க்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 

ஏன் திடீரென்று இந்த இந்த சூழ்நிலை உருவானது என்று பலரிடமும் கேள்வி எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டு அதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில் ரிசர்வ் வங்கி , கடந்த 2016 - 2017 மற்றும் 2017 -2018 ஆம் நிதியாண்டுகளில் 2000 ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டதாகவும், ஆனால் தற்போது செயல்பட்டு வரும் 2019 - 2020ம் நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட அச்சிடப்படவில்லை என்றும் கூறியுள்ளது. இதனை பற்றி அறிந்த பொருளாதார நிபுணர் நிதின் தேசாய் , புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஒரேடியாக நிறுத்துவதற்கு பதிலாக படிப்படியாக அதனுடைய புழக்கத்தை குறைத்தால் பொதுமக்கள் சிரமம் இன்றி வாழலாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது , புதிய 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டு விரைவில் வெளியில் வர உள்ளது. கள்ள நோட்டுகளை அச்சடிக்க முடியாத வகையில் இந்த புதிய 1000 ரூபாய் நோட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தவுடன், இந்தியாவின் உயரிய மதிப்பான 2000 ரூபாய் தாள்களை படிப்படியாக திரும்பப் பெற்று விடுவதாக மத்திய நிதித்துறை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . இருப்பினும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.