பீடி சுற்றிக் கொண்டே படிப்பு! ஏழைத் தாயின் மகள் டி.எஸ்.பி ஆன நெகிழ வைக்கும் சம்பவம்!

சப்பை காரணங்கள் சொல்லாமல் சாதித்துக்காட்டிய மாணவி.. டிஎஸ்பி ஆனகதை.


வறுமை குடும்ப சூழல் ஆகியவற்றை காரணம் காட்டாமல் தன்னம்பிக்கை மட்டுமே துணையாகக் கொண்டு மாணவி ஒருவர் காவல்துறை டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார்.

நெல்லை மாவட்டம் சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் பால்தாயி  தம்பதியின் மகள் சரோஜா. இவர்களது குடும்பம் வறுமை சூழ்ந்த ஏழ்மையான குடும்பம். பீடி சுற்றுவது தான் இவர்களது தொழில்.

பத்தாம் வகுப்பில் 338 மதிப்பெண்களும் 12 ஆம் வகுப்பில் 719 மதிப்பெண்களும் தான் சரோஜா எடுத்தவை. ஆனால் விழுந்து விழுந்து படித்து மாவட்ட மாநில அளவில் சாதனை புரிந்த மாணவர்களை காட்டிலும் இவர் செய்த சாதனை தான் உண்மையானது.

வறுமையான சூழலிலும் கல்லூரி படிப்பை முடித்த இவர் காவல் துறையில் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார். அருகில் உள்ள ஒரு தனியார் பயிற்சிப் பள்ளியில் இவர் சேர்ந்தார். டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்காக தன்னை தயார்படுத்தி வந்தார் சரோஜா.

மனதில் ஒருபுறம் குடும்ப சூழ்நிலையும், மறுபுறம் தனது இலட்சியத்தையும் உத்வேகமாக பயன்படுத்திக்கொண்டார் சரோஜா. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. எழுதிய முதல் முயற்சியிலேயே சரோஜா தேர்ச்சி பெற்றார். தற்போது காவல்துறை டிஎஸ்பியாக இவருக்கு பணி கிடைத்துள்ளது.

இதனால் அவரது குடும்பமும், ஊர் மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்ட ஆட்சியரான ஷில்பா பிரபாகர் சதீஷ், மாணவி சரோஜாவை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது மகள் பெற்ற வெற்றியால் தந்தை முருகானந்தமும் தாய் பால் தாயும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

மிகவும் கஷ்டப்பட்டு தான் குழந்தைகளை வளர்த்ததாக பால்தாய் ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார். தனது வெற்றி பற்றி பேசி உள்ள மாணவி சரோஜா, விடாமுயற்சியுடன் லட்சிய பாதையை நோக்கி நடை போட்டால் வெற்றி தேடிவரும் என்று, சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் சேதி சொல்லியுள்ளார்.

தன்னைப் போன்ற அனைவருக்கும் உதவ உள்ளதாகவும், தனக்கு கிடைத்த பணியை மக்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வறுமை, குடும்ப சூழல் என வெறுமனே காரணங்களை சுட்டிக்காட்டி, கை விரித்து உட்கார்ந்து கொண்டால் எதுவும் நடந்து விடாது. துணிந்து தன்னம்பிக்கையுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்கிறார் மாணவி சரோஜா.

மேலும் தனது தாய் தந்தையை போன்று வீட்டில் இருக்கும் போது பீடி சுற்றிக் கொண்டே படித்ததாகவும் இதன் மூலம் குடும்பத்தை ஓரளவுக்கு வறுமையில் இருந்து மீட்க முடிந்ததாகவும் கூறியுள்ளார் சரோஜா. பீடி சுற்றிக் கொண்டே படித்து டிஎஸ்பி ஆகியுள்ள சரோஜாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.