மோடியின் அடுத்த அதிரடி, சுற்றுசூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு… பழங்குடியினர் வாழ்க்கை அம்புட்டுத்தானா..?

இந்த கொரோனா காலத்திலும், மோடி_அரசாங்கம், நமது நாட்டின் நீர், நிலம், வனம் மற்றும் இயற்கை வளங்களை அழித்துவிடும் நோக்கத்துடன், புதிய EIA 2020 சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு அறிக்கையை முன்வைத்துள்ளது என்றும் அதனை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று AIKM விவசாயிகள் மகாசபை கோரிக்கை வைத்துள்ளது.


கொரோனா கொள்ளை நோயில் உலகம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த சூழலில், கடந்த மார்ச் 12 ல், MoEF & CC மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு விதிகளுக்கான புதிய வரைவை அவசர அவசரமாக வெளியிட்டது.

இந்த வரைவு அறிவிக்கையால் நேரடியாகப் பாதிக்கப்படும் மக்கள் பிரிவினர் [ மலைவாழ் மக்கள், வனங்களில் வசிப்போர், விவசாயிகள், கடலோர மக்கள் ] கருத்துக்கள் இதுவரை கேட்கப்படவில்லை. அதற்கான எந்த கூட்டங்களும் எங்கும் நடத்தப்படவில்லை; கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதற்கான வாய்ப்பும் இல்லை.

மேலும், பாதிக்கப்படும் மக்கள் பிரிவினர் ஆன்லைனில்/ Online - Digital ல், இணையதளத்தில், தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பும் அற்றவர்கள் ஆவர். இவர்களைக் கலந்து கொள்ளாமலேயே, அவசர அவசரமாக வரைவு அறிவிக்கையை நிறைவேற்ற முயற்சிப்பது சனநாயக விரோத செயல்பாடு ஆகும்.

மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய வரைவு, சுற்றுச்சூழல் குறித்த எந்தவிதமான அக்கறையின்றி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கட்டற்ற வகையில் கதவைத் திறந்து விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை முதலாளிகள், "தொழிலை சிரமம் இல்லாமல் நடத்த உதவுவது( ease of doing business) என்பது இதன் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிமவள சுரங்க செயல்பாடுகளை கட்டற்று ஊக்கப்படுத்துவது, அடர்த்தியான காடுகளைக்கொண்ட சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் புதிய சுரங்கங்கள் அமைப்பது, நிலக்கரி & மின்சார தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதற்கு வாய்ப்பளிக்கவே இந்த வரைவு அறிவிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டியுள்ளது.

மேலும் இத்தகைய சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கரிம வெளியீட்டை அதிகப்படுத்தும் என்பதும், இது பாரிஸ் உடன்படிக்கையில் கரிம வெளியீட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து, இந்தியா கொடுத்துள்ள வாக்குறுதிகளுக்கு எதிரானதாகும் என்பதும் முக்கிய விஷயமாகும்.] பல்வேறு 8 /6 வழி விரைவு நெடுஞ்சாலைகள் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை (EIA ) முன் நிபந்தனையாக்குவதை ஒழித்து கட்டுவதும் இதன் நோக்கமாகும் எனவும் கருதவேண்டியுள்ளது.

இனிமேல் சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிலம், நீர், உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆலைகள், #நெடுஞ்சாலைகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்க வேண்டியதில்லை என்பதாகிறது; இதனால், காலம் காலமாக அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் முதல் விவசாயிகள் வரை தங்கள் நிலம் மற்றும் வாழ்வாதாரம், வனங்கள் மீதான உரிமைகளை இழப்பர் எனத் தெரிகிறது. 

 கார்ப்பரேட் நிறுவனங்கள், violations செய்தால் அதாவது சுற்றுச் சூழல் சட்டத்தை மீறினால், அதை சட்டத்துக்கு உட்பட்டதாக மாற்றுவதற்கு (legitimate) வழிவகை செய்யம் பிரிவுகள் இந்த வரைவில் உள்ளன. அதாவது போதிய தகுதி சான்றுகள் valid clearance இல்லாமல் ஆரம்பித்த தொழிற்சாலைகள் சட்டபூர்வமான அந்தஸ்து பெற்றுவிடுகின்றன. ஆக மொத்தத்தில் இந்த வரைவு அறிவிக்கையின் நோக்கம் கார்ப்பரேட்டுகளுக்கானதே; சுற்றுசூழல் பாதுகாக்க அல்ல எனத் தெளிவாகிறது. 

ஆக மொத்தத்தில், இந்த வரைவு அறிவிக்கையானது சுற்றுச்சூழல் சட்டத்தின் உயிரைப் பறித்து விட்டு முன் வைக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் ஆதரவு வரைவு அறிவிக்கையே ஆகும்.

இந்தியாவின் சுற்றுச் சூழலைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் இந்த வரைவு அறிவிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளும், சூழலியலாளர்களும், ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய சட்ட வரைவு குறித்துக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகின்றது. பாதிக்கப்படும் மக்கள் கருத்துக்கள் இன்னமும் பெறப்படவில்லை. எனவே, மோடி அரசாங்கம் இந்த வரைவு அறிவிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.