முதலைக் குட்டி பிடிக்கும் மோடி எப்போது வேலை பிடித்துத் தரப்போகிறார்?

இந்தியா கடுமையான பொருளாதார மந்தத்தை நோக்கி சென்றுகொண்டு இருப்பதாக நாளுக்கு நாள் பொருளாதார மேதைகள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார்கள். ஏனென்றால் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவையில் இருந்தே பொருளாதாரம் படுத்துவிட்டது.


ஏற்கெனவே சிறு, குறு தொழில்கள் மற்றும் ஜவுளித் தொழில் படுத்தேவிட்டது. இப்போது வாகனத்துறை தள்ளாடி வருகிறது. இந்திய மோட்டார் வாகன உற்பத்தித் துறை ஆண்டுதோறும் 8 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று கோடி பேருக்கு வேலை வாய்ப்பை அளித்து வரும் ஒரு மிகப்பெரிய துறையாக இருந்து வருகிறது.

நாட்டில் உள்ள ஐந்து முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்களில் மட்டுமே நேரடியாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை செய்து வரும் நிலையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் மூலமாக 50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. 

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 7.2 கோடியாக உயர்ந்து விட்ட நிலையில் புதிய வாகனங்களின் விற்பனை வேகமாக குறைந்து வருகிறது. சுமார் 30 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 5 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன.

இந்த சூழலில் மத்திய அரசு மின்வாகன உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும் வாகனங்களை விற்க முடியாமல் உள்ள நிறுவனங்கள், தங்களிடம் பணியாற்றும் பணியாட்களை குறைக்கும் பணியில் இறங்கி உள்ளது . 

மோட்டார் வாகனத் துறை வீழ்ச்சியடைந்து வருவதால் நாட்டின் பொருளாதாரம் குறைய வாய்ப்புள்ளதாகவும் வேலைவாய்ப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகளும் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் முதலீட்டு ஆலோசகர் விவேக். வாகன உற்பத்தி துறையில் தனி கவனத்தை செலுத்தி மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு அரசு எடுத்துச் செல்ல முன்வரவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாகவும் உள்ளது...