திடீர் வலிப்பு..! மயங்கி சரிந்த மாணவி துடிதுடித்து பலி! ஈரோடு கல்லூரி விபரீதம்!

கல்லூரி மாணவி திடீரென இறந்ததால் சாவில் மர்மமிருப்பதாக அவருடைய தந்தை புகார் அளித்திருப்பது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் ராமாபுரம் புதூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட அன்பு நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகளின் பெயர் சாதனா. சாதனாவின் வயது 20. இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்தார். அவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் சாதனாவுக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவருடைய விடுதி தோழிகள் விடுதி நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளனர். உடனடியாக அவர்கள் சாதனாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவருடைய நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். செய்தியானது சாதனாவின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.

இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு இதுவரை வலிப்பு வந்ததேயில்லை என்றும், அவருடைய இறப்பில் மர்மம் இருப்பதாகவும் தந்தை சத்தியமூர்த்தி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் சாதனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.