நண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த இளைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி! வேலூர் விபரீதம்!

இறந்தவர்களின் பிரிவை தாங்க இயலாமல், அவர்களின் நெருங்கியவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மூலம் தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் வேலூர் மாவட்டத்தில் இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரினால் பெரும் கலவரம் நிகழ்ந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


சலவன்பேட்டை என்னும் பகுதி வேலூர்  மாவட்டத்தில்  அமைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த  தினேஷ் என்பவர் எதிர்பாராமல் உயிரிழந்தார். அந்த சோகத்தில் தினேஷின் குடும்பத்தினரும், நண்பர்களும் வாடி வருகின்றனர். இந்நிலையில், தினேஷ் மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரின் நெருங்கிய நண்பர் சையத் ரசூல் என்பவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஓட்டினார்.

ஆனால் தினேஷுடன் தனக்கிருந்த முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த சாரங்கன் என்பவர் அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை கத்தியால் குத்திக் கிழித்தார். இதனை கேள்விப்பட்ட ரசூல் சாரங்கனிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலைமை அளவுக்கு மீறிச்சென்று கைக்களப்பாக மாறியது.

ஆத்திரமடைந்த சாரங்கன், சையத் ரசூலை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். படுகாயம் அடைந்த சையத் ரசூல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.   பின்னர் வேலூர் போலீசார் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்தனர். ரசூலின் உடலை  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

சாரங்கன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சாரங்கன் தலைமறைவானதால் அவரை தேடி வருகின்றனர். கொலையாளி சாரங்கனின் தம்பி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதில் சமீபத்தில் மரணமடைந்த நண்டு தினேஷுக்கு தொடர்பிருந்த நிலையில், அவருடைய நண்பர் சையத் ரசூல் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார்.