குரங்குகளின் கோயிலுக்குள் புத்த விகாரம்..! ஞானியின் தலையில் இருந்து உருவான பேன்கள்

சுயம்புநாதர் கோயில் நேபாளத் தேசியத் தலைநகரம் காத்மாண்டிற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு சிறு மலையில் தூபியுடன் அமைந்த பண்டைய காலப் பௌத்த கோயிலாகும்.


இருப்பினும் இது இந்து மற்றும் பௌத்தப் பயணிகளுக்குப் புனிதமான மலைக் கோயிலாகும்.சுயம்புநாதர் வளாகம் ஒரு பௌத்த நினைவுத் தூணையும், பல கோயில்களையும் கொண்டுள்ளது. அவற்றுள் பல கிறித்து பிறப்பிற்கு முன், லிச்சாவி அரச குலத்தினரால் எழுப்பப்பட்டதாகும். சுயம்புநாதர் கோயில் வளாகத்தில், புத்த விகாரம், தூண், அருங்காட்சியகம், நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

சுயம்புநாதர் விகாரத்தில் அமைந்த தூணின் நாற்புறத்தில் புத்தரின் அழகிய கண்கள் வரையப்பட்டுள்ளன.. கோயிலின் பெரிய குவிமாடம் உலகம் முழுவதையும் அடையாளப்படுத்துகிறது, மேலும் குவிமாடத்தின் கீழ் உள்ள கோபுரத்தின் கண்கள் ஒரு நபருக்கு அறிவொளி நிலையை அடைய உதவும் ஞானத்தையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இவ்வளாகத்தில் உணவு விடுதிகள், கடைகள், தங்கும் விடுதிகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. 365 படிக்கட்டுகள் வழியாக மலையின் உச்சியில் உள்ள பௌத்தநாத் கோயிலை அடையலாம். தெற்கில் உள்ள மலைச்சாலை வழியாகச் சிற்றுந்துகளில் கோயிலை அடையலாம். படிக்கட்டுகள் வழியாகச் செல்லும் போது முதலில் பெரிய அழகிய வஜ்ராயுதத்தைக் காணலாம். பின்னர் பெரிய வெள்ளை நிற அரைக் கோள வடிவக் கோயிலின் கூரை மற்றும் நான்கு புறத்திலும் புத்தரின் கண்கள் வரையப்பட்ட தூணைக் காணலாம்.

சுயம்பு புராணக் கதையின்படி, ஒரு காலத்தில் காத்மாண்டு சமவெளி முழுமையும் தாமரை மலர்களால் நிறைந்த நீரால் சூழப்பட்டு இருந்தது. பின்னர் இறைவன் அருளால் தானாகவே (சுயம்பு) இச்சமவெளி தோண்றியதால், இத்தலத்திற்கு சுயம்புநாதர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இத்தலத்தில் தாமரை மலர் ஸ்தூபியாக மாறியது.

சுயம்புநாதர் கோயிலை குரங்குகளின் கோயில் (Monkey Temple) என்றும் அழைப்பர். இக்கோயிலில் வட மேற்குப் பகுதியில் ஆண்டு முழுவதும் குரங்குகள் வசிப்பதால் இப்பெயராயிற்று. இக்குரங்குகள் புனித விலங்காக மக்கள் கருதுகின்றனர். இங்கிருந்து மக்களுக்கு ஞான உபதேசத்தை செய்து கொண்டிருந்த மஞ்சுஸ்ரீ என்ற போதிசத்துவரின் தலையில் இருந்த பேன்களே, அவர் இறந்த பின், குரங்குகளாக மாறியது என்று போதிசத்துவர் கதைகள் கூறுகிறது.