மோடியின் இடஒதுக்கீடு சூழ்ச்சி… கொந்தளித்த கனிமொழி, கப்சிப் எடப்பாடி

மோடி கொண்டுவந்த பொருளாதார இடஒதுக்கீடு எத்தனை கொடுமையானது என்ற புரிதல் சாதாரண மக்களுக்கு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளுக்கும் இல்லை என்பதுதான் கொடுமை. மோடிக்கு காங்கிரஸும் துணைபோனது வரலாற்றுத் தவறு


எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென 10 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவந்து, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் செய்திருக்கிறார் மோடி. வட மாநிலங்களில் இருக்கும் உயர் சாதியினர் வாக்குக்காக காங்கிரஸும் இதனை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.

கஷ்டப்படுறவங்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தா என்ன தப்பு என்று கேட்கும் வகையில்தான் இன்றைய இளையதலைமுறை இருக்கிறது. எதுவும் புரியாத மக்களுக்கு சவுக்கடி கொடுப்பது போன்று பத்திரிகையாளர் முத்துநாகு 10 கேள்விகள் முன்வைத்திருக்கிறார். அவற்றுக்கு பதில் சொல்ல முடிகிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்.

 

10 % பார்ப்பனர் இட ஒதுக்கீடு குறித்து 10 கேள்விகள்:

1. 2015 உலக வங்கி அறிக்கையின் படி 58% இந்தியர்களின் வருட வருமானம் ரூ. 79,200 க்கு குறைவு. 23% இந்தியர்களின் வருட வருமானம் ரூ. 32,000 க்கும் குறைவு. இது கண் முன்னே தெரியும் உண்மையாக இருக்கும் போது ஆண்டுக்கு 8 லட்சம் ஈட்டும் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம் ?

2. 3 முதல் 5 சதம் உள்ள பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு எந்த ஊர் நியாயம் ?

3. இட பங்கீட்டினால் தகுதி திறமை பாதிக்கப்படும் என்று இது நாள் வரை தாங்கள் பேசி வந்தவை யாரை ஏமாற்று வேலை ? இப்போது குறைந்த மதிப்பெண் எடுத்துவர்களுக்கு இடம் தருவதால் 'தரம்' பாதிக்கப்படாதா?

4. ஆண்டுக்கு 2.5 லட்சம் பணம் ஈட்டுபவர் வருமான வரி கட்டும் பணக்காரர். ஆனால் 8 லட்சம் வருடம் சம்பாதிக்கும் பார்ப்பனர் Economically backward ?

5. மேற்கூரையுடன் வீடோ அல்லது ஒரு சிறு மோட்டார் சக்கர வாகனமோ இருந்தால் ரேசன் கிடையாது. அவர்கள் பணக்காரர்கள். ஆனால் மாதம் 70,000 ரூபாய் ஈட்டி 1000 சதுர அடி வீட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் நலிந்தவர்களா ?

6. இந்துக்களுக்காக கட்சி நடத்துவதாக கூறும் BJP இது வரை பிராமணரல்லாத பிற இந்துக்களுக்கு செய்தது என்ன?

7. பெரும்பாண்மை இந்துக்களான OBC /BC/MBC/ SC/ ST பிரிவினர் இட ஒதுக்கீடு பெற இயலாத வகையில் UGC யில் சட்டதிருத்தம் செய்துவிட்டு பார்ப்பனர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கும் உங்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியா அல்லது பார்ப்பன ஜனதா கட்சியா ?

8. இட ஓதுக்கீட்டினால் தான் இழிவு வந்துவிட்டது என்று உளரும் டாக்டர். கிருஷ்ணசாமி போன்ற இந்துத்துவ வேலையாட்களுக்கு இப்போது தரப்படும் 10% இடஒதுக்கீட்டினால் பார்ப்பனர்கள் இழிசாதி ஆகிவிட்டனர் என்று சொல்லி புரிய வைப்பீர்களா ?

9. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமா அல்லது அனைத்து சாதியினரும் ஜனநாயக பிரதிநிதித்துவம் பெறும் திட்டமா ?

10. பார்ப்பனர்களுக்கு 10% இட ஒதுக்கீடு எனில் நீட் தேர்வு எதற்கு ? எந்த வகை standard நீங்கள் கொண்டு வரபார்க்கின்றீர்கள் ???




இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மனசாட்சி படி பதில் சொல்பவராக இருந்தால், 10 சதவிகித இடஒதுக்கீடு எத்தனை அபாண்டம் என்பது புரியும். இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆவேசமாக குரல் எழுப்பியவர் கனிமொழி எம்.பி என்பதில் நாம் பெருமைப்படலாம். பெரியார் பிறந்த மண்ணிலிருந்து இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்ப வந்திருக்கிறேன் என்றார். அதிசயமாக தம்பிதுரையும் இடஒதுக்கீடு குறித்து குரல் கொடுத்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்காமல் வரலாற்றுத் துரோகம் செய்துவிட்டனர். வழக்கம்போல் ஐயா இடப்பாடி இன்னமும் மவுனமாக இருக்கிறார்.

இடஒதுக்கீடு தேவையில்லாத ஒரு காலம் வரும். அது எப்போது வரும் என்பதற்கு இந்தப் பதிவு சரியான சாட்சி

 

 

கேள்வி : இட ஒதுக்கீடை எப்போ நிறுத்தலாம்...???

 

பதில் : பத்ரி ஷேசாத்ரி, ஸ்ரீனிவாச ஐயங்கார் எனும் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் எதிரி நாட்டு ராணுவத்துடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தனர்...

ராஜேந்திர ஷத்ரியன், கதிரவ தேவன்,  ராமக் கோனார் எனும் மூன்று துப்புரவு தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதி...

வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதியில் பெருமாளுக்கு சிறப்பு ஆலாபனை பூசை நடபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தான தலைமை குரு ராமசாமி சக்கிலியார் அறிவிப்பு...

பழநி முருகன் கோவிலில் முதன்மை அர்ச்சகர் குழுவில் முத்துசாமி என்ற ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்தவர் பொறுப்பேற்றுக்கொண்டார்...

இதுபோன்ற செய்திகள் வரத்தொடங்கும்போது இட ஒதுக்கீட்டினை நிறுத்தி விடலாம்... அதுவரை பெரியார் மண் என்று நிரூபிப்போம்.

இடஒதுக்கீடு மசோதா நிறைவேறினாலும், நீதிமன்றம் இதனை அனுமதிக்காது என்றுதான் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படியே நடக்கட்டும்.