அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கட்சிப் பதவி பறிப்பு..! ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து அதிரடி..! பரபர காரணம்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை பறித்து முதலமைச்சர் ஈபிஎஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விருதுநகர் மாவட்டத்திற்கு புதிய செயலாளரோ அல்லது பொறுப்பாளரோ நியமிக்கப்படவில்லை.

முன்னதாக ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து இந்துத்வா கருத்துகளையும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தார். மேலும் சமீபத்தில் சிவகாசி குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் கடுமையாக தாக்கப்பட்டார். இதன் பின்னணியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயர் அடிபட்டது.

இந்த நிலையில் தான் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்எஸ்ஆர் ராஜவர்மனுடனும் ராஜேந்திர பாலாஜி மோதலில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாகவும் ராஜேந்திர பாலாஜி பதவி பறிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கூறப்படுகிறது.