பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன தெரியுமா?

தன் விடாமுயற்சியாலும் கடும் தவத்தாலும் ஆகாய கங்கையை பூவுலகுக்கு கொண்டு வந்தவன் பகீரதன்.


ஆகவே செய்ய இயலாத காரியத்தையும் செய்து முடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் விடாமுயற்சிக்கு பகீரதப் பிரயத்தனம் என்று சொல்லுவதுண்டு. பகீரதனின் இந்தக் கதை வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரரால் ராமலக்ஷ்மணர்களிடம் சொல்லப்படுகிறது.

கங்கை நதி பூமிக்கு வர காரணமானவர் பகீரதன். அயோத்தியை ஆண்ட ஸ்ரீராமனின் வம்சமான இஷ்வாகு குல அரசர் சகரன் என்பவர்தான் பகீரதனின் கொள்ளு தாத்தா. அவர் குழந்தைப் பேறு வேண்டி தவம் செய்ததின் பயனால் அவரது முதல் மனைவியான சுமதிக்கு அறுபதாயிரம் பிள்ளைகளும், இரண்டாவது மனைவி கேசினிக்கு அம்சுமான் என்ற ஒரு மகனும் பிறந்தனர்.

அவர் அசுவமேத யாகம் செய்ய விரும்பினார். அதற்காக யாகக் குதிரையை எல்லா நாடுகளுக்கும் அனுப்பினார். அவரை யாரும் எதிர்ப்பவர்கள் இல்லாததை அறிந்த தேவேந்திரன் தனது பதவி பறிபோய்விடுமென பயந்து அக்குதிரையை திருடிச்சென்று கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவிட்டான். இதனால் கோபம் கொண்ட சகரன் தனது குதிரையை கண்டுபிடித்து வரை தமது அறுபதாயிரம் மகன்களை அனுப்பினார்.

அவர்கள் கபில முனிவரின் ஆசிரமத்தில் குதிரையைக் கண்டுபிடித்தனர். முனிவர்தான் தங்களது குதிரையைத் திருடியதாக எண்ணி கடும் சொற்களால் பேசினர். தவம் கலைந்ததால் கோபம் கொண்ட கபிலர் அவர்கள் அனைவரும் சாம்பலாகச் சாபமிட்டார். அதை அறிந்த அம்சமான அவரிடம் பணிந்து வேண்ட அவர்கள் மோட்சம் அடைய வேண்டுமெனில் தேவ லோகத்தில் இருக்கும் கங்கையில் அவர்கள் சாம்பலை கரைக்க வேண்டும் என்றார்.

அம்சமானும் அவன் மகன் திலீபனும் எவ்வளவு முயற்சித்தும் கங்கையை பூமிக்குக் கொண்டு வர முடியவில்லை. தமது முன்னோர் நற்கதி அடையாததை அறிந்த திலீபனின் மகன் பகீரதன் தனது முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டி ஆயிரம் ஆண்டுகள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தான். அவன் தவத்துக்கு இரங்கிய கங்கை பூமிக்கு வந்தாள்.

அவள் இறங்கிய வேகத்தில் பூமியே மூழ்கி காணாமல் போய்விட்டது. பூமியை காப்பாற்ற கங்கையை தனது சடையில் தாங்கி அவள் வேகத்தை கட்டுப் படுத்தினார் சிவபெருமான். இதனால் மனம் வருந்திய பகீரதன் சிவபெருமானைக் குறித்து மீண்டும் தவம் செய்ய, அவன் தவத்துக்கு இரங்கிய சிவன் கங்கையின் வேகத்தை குறைத்து பூமிக்கு அனுப்பினார். அந்நதியின் பெயரே பாகீரதி ஆயிற்று. பகீரதனின் முன்னோர்களும் நற்கதி அடைந்தனர்.

இதனாலேயே ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பலன் அடைவதை பகீரதப் பிரயத்தனம் என்கிறோம்